நடராசா ரவிராஜின் 18ஆவது நினைவு தினம் யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள நினைவுச் சிலையருகில் இன்று (10) அனுஷ்டிப்பு

1 month ago






தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராசா ரவிராஜின் 18ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவுச் சிலையருகில் இன்று (10) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அமரர் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ், ஈகைச் சுடர் ஏற்றி நினைவஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ரவிராஜின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அமரர் நடராசா ரவிராஜ், 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டியவிலுள்ள அவரது இல்லத்தில் இருந்து அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மனித உரிமை இல்லத்தை நடாத்தி வந்த ரவிராஜ், 1998 - 2001 ஆண்டுகளில் யாழ். மாநகர சபை உறுப்பினராகவும், பிரதி முதல்வராகவும், முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு இரு தடவைகளும் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.