மனித உரிமைக் குற்றங்களில் ஈடுபட்டோரைப் பதவிநீக்குக! மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம்.
மனித உரிமைக் குற்றங்களில் ஈடுபட்டோரைப் பதவிநீக்குக! மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம்.
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் உயர்பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சிறப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் உள்ளதாவது:-
"மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவராக எவரொருவர் குற்றஞ்சாட்டப்பட்டால் அவர் அரசாங்கத்தின் உயர் பதவியில் நியமிக்கப்படக் கூடாது. இந்த நடைமுறையை இலங்கை அரசாங்கம் இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும். அத்துடன், அரசாங்கத்தின் உயர்பதவிகள், பாதுகாப்புத்துறை, இராஜதந்திரப் பதவிகள் என்பவற்றை வகிக்கும் நபர்கள் மீது மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத்தன்மைமிக்க குற்றச்சாட்டுகள் வெளியானால், அவர்களை அதிகாரத்திலிருந்து நீக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அத்தகையவர்களை நியமனம் செய்தலை தவிர்க்க வேண்டும், மேலும் நிலை மாறுகால நீதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்பில் அவ்வாறான நபர்கள் இடம்பெற்றிருந்தால் அவர்களையும் நீக்கவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், புதிதாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஓர் அவசர விடயமாக அனைத்து மக்களையும் அரவணைக்கக்கூடிய தேசியத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அத்தோடு முரண்பாடுகளிற்கான மூல காரணங்களைக் கவனத்தில் எடுத்து ஜனநாயகத்தைப் பலப்படுத் துவதற்கும், அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கும் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும்” - என்றுள்ளது.