இந்திய மீனவர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் கோருவதை ஏற்க முடியாது.-- யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவிப்பு
இந்திய மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோருவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதை தமிழக முதல்வர் தடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள அந்த சம்மேளனத்தின் அலுவலகத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர்.
இந்திய மீனவர்கள் எங்களது வளங்களை சூறையாடுவதுடன், வாழ்வாதாரம், மனிதாபிமானம் என்று தொடர்ச்சியாக பொய்களை கூறி, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றனர்.
எனவே இந்திய கடற்படையினை கொண்டு அவர்களை எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.