இலங்கை தமிழ் அரசுக் கட்சி கட்சியாகவே இருக்கிறது. கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று சீ.வி.கே சிவஞானம் தெரிவிப்பு.

3 months ago


இலங்கை தமிழ் அரசுக் கட்சி கட்சியாகவே இருக்கிறது. கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் துணை தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சி கட்டுக்கோப்பான கட்சி. அதை யாரும் மாற்ற முடியாது.

தேர்தல் காலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை முன்வைப்பார்கள். கட்சி கூடி முடிவை அறிவிக்கும். அது கட்சி யின் முடிவு. இதன் பின்னர் பலரும் பல சந்திப்புகளை செய்வார்கள்.

அதன் பின்னர் சில முடிவுகளை தனிநபர்கள் எடுக்கும் நிலை உருவாகிறது. அவ்வாறே இந்தத் தேர்தல் நேரத்தில் இடம்பெற்றுள்ளது.

இத்தகைய நிலையில் யாருக்கு யார் ஒழுக்காற்று நடவடிக்கைள் எடுப்பது? தலைவருக்கு எதிராக எடுப்பதா? கட்சியைப் பொறுத்த வரை கட்சியில் ஒவ்வொருவரையும் பலர் சந்திப்பார்கள். தமக்கு ஆதரவு தருமாறு கேட்பார்கள். கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ் அரசுக் கட்சிக்கு கொள்கை இருக்கிறது. அது நிலையாக இருக் கும். சுமந்திரன் மீதும் தவறு இருக் கும். அதை பேசிக்கொள்ளலாம்.

கட்சி நிலையாக இருக்கும். கருத்து சொல்வதற்கு சுதந்திரம் உள்ளது. அதற்காக எல்லோருக்கும் அந்தச் சுதந்திரம் இல்லை.

தற்போது ஜனாதிபதித் தேர்தலே நடைபெறவுள்ளது. அடுத்து வரும் காலத்தில் பல்வேறு தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அந்த நேரத்தில் பலரும் வருவார்கள். அந்த நேரத்தில் நாம் முடிவுகளை எடுப்போம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எமது விருப்பம். ஆனால் இனி அது கனவாகவே இருக்கும் என்பதே எனது கருத்தாகவுள்ளது-என்றார்.



அண்மைய பதிவுகள்