எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை- ப.சத்தியலிங்கம் தெரிவிப்பு.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், இதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி எதிர்வரும் 16ஆம் திகதி தேர்தல் குழு கூடி ஆராய்ந்து. மக்களுக்கு அறிவிக்கும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ப.சத்தியலிங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது தொடர்பான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
வவுனியாவில் கூடிய தேர்தல் தொடர்பான குழுவின் கூட்டத்தில் கட்சியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும், சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைக் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குகள் குறித்தும் அவருடன் கலந்துரையாடித் தீர்மானிப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.