தமிழகத்துக்கு காவிரி நீரைப் பெற துணை நிற்பதாக கட்சிகள் தெரிவிப்பு.

5 months ago


தமிழகத்துக்கு காவிரி நீரைப் பெற துணை நிற்பதாக பா. ஜ. க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர். காவிரி விவகாரம் தொடர்பில் நடைபெற்ற சட்டப்பேரவை அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினர்.

எந்த ஆட்சியாக இருந்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காமல் வஞ்சிக்கின்றனர். தி. மு. க. போதிய நீரை பெற்றுத்தர அரசியல் ரீதியிலும், சட்ட ரீதியாகவும் அழுத்தம் தரவேண்டும். தமிழக முதல்வர் கொண்டுவந்த கண்டன தீர்மானத்தை மட்டும் அ. தி. மு.க. ஆதரிக்கிறது- முன்னாள் அமைச்சர்களான ஓ. எஸ். மணியன், எஸ். பி. வேலுமணி ஆகியோர் தெரிவித்தனர்.

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமையைப் பெற தமிழக அரசுடன் பா. ஜ.க. ஒன்றுபட்டு நிற்கும். இதில் பிரதமர் தலையிட வாய்ப்பே இல்லை. மாநில உரிமையைப் பெற அரசியல் பேசக்கூடாது. மக்கள் உரிமையைப் பெற ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. நிர்வாகி கரு.நாகராஜன் கூறினார்..

முதல்வரின் தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது. கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பிரதமர் இதில் தலையிட்டு தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமையைப் பெற்றுத்தர வேண்டும். இந்த விவகாரத்தில் அனைவரிடமும் ஒற்றுமை இருக்கிறது என்று நம்புகிறோம் என்று தமிழக காங்கிரஸ் தலை வர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

கர்நாடகாவின் பாசனப்பரப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிகரித்துள்ளது குறித்தும் தண்ணீர் பெறவும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும். தமிழக அரசு வலிமையான அதிகாரம் வாய்ந்த ஆணையத்தை உருவாக்கவும் உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்- இவ்வாறு பா.ம.க. நிர்வாகி ஜி. கே.மணி கூறினார்.

தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்று அனைத்து கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைவரை சந்தித்து கர்நாடக அரசுக்கு வழிகாட்டுதலை வழங்குமாறு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் போன்ற ஆலோசனைகளை முன்வைத்தோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே கர்நாடக அரசு மதிக்கவில்லை என்பது தான் அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். என்று வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.