இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அறிக்கையில் பரந்துபட்ட விடயங்கள் உள்ளடக்கம் என எம்.பி சுமந்திரன் திருப்தி.

4 months ago


இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை பரந்துபட்ட விடயங்களை உள்ளடக்கியிருப்பதாகத் திருப்தி வெளியிட்டிருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள 57 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் வலுவானதொரு புதிய தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பின்னணியில், இலங்கையின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தில் மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சமகாலப் போக்குகள் உள்ளடங்கலாக நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் விரிவான அறிக்கை கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அவ்வறிக்கையில் 'தேர்தல்களின் பின்னர் புதிதாகத் தெரிவாகும் அரசாங்கம் யுத்தத்துக்கு அடிப்படையாக அமைந்த காரணி களைக் களையக் கூடியவாறான, அனைவரையும் உள்ளடக்கிய தேசிய இலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுமாத்திரமன்றி ஜனநாயகத்தை வலுப்படுத்தக்கூடிய, அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தக் கூடிய, பொறுப்புக் கூறலையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தக் கூடியவாறான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களையும், அரசியலமைப்புத் திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இப்புதிய அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பில் தனது திருப்தியை வெளிப்படுத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், இவ்வறிக்கை மேலும் வலுவானதாக அமைந்திருக்க முடியும் எனும் போதிலும் கூட இதிலேயே பரந்துபட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது திருப்தியளிக்கின்றது என்று குறிப்பிட்டார்.

அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை' உள்ளடக்கிய தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், அச்செயற்திட்டத்தின் கீழான பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு புதிய தீர்மானமொன்றை நிறைவேற்றி வேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டினார்.

எனவே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் வலுவானதொரு புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் அல்லது தற்போதைய தீர்மானம் வலுவான கூறுகளுடன் காலநீடிப்புச் செய்யப்படவேண்டும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.