பனம் பொருள்களில் விழா செய்பவர்கள் பனைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துங்கள்
"அழகான அந்தப் பனமரம் அடிக்கடி நினைவில் வரும், தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அண்ணை" என்று கவிஞர் காசிஆனந்தன் பாடிய பாடல் இன்றும் நினைக்கும் அளவுக்கு வடக்கில் பனை மரங்கள் அழிவடைந்து வருகின்றன.
"வடலிகள் வானுயரும்" என்ற கருத்துப்பட ஆறுதல் நிறுவனம் தனது நிறுவனத்துக்கு அடைமொழியாக வைத்துக் கொண்டது.
அந்த நிறுவன பணிப்பாளர் மறைந்த முன்னாள் வடக்கு, கிழக்கு கல்விப் பணிப்பாளர் டிவகலாலா அவர்கள் இதன் அர்த்தம் பற்றி தெரிவிக்கும் போது வடலிகள் வானுயர்வதன் மூலம் எமக்கு வடலிகள் எவ்வளவு பயனைத் தருகிறதோ அதே போல் இந்த நிறுவனமும் வளர்ந்து பயனைத் தரும்.
இந்த மக்களை பொருளாதார மட்டத்தில் உயர்வடையச் செய்ய வேண்டும் என்றும், இந்த வாக்கியத்தை ஒவ்வொரு வரும் சொல்லும் மனதில் தாம் முன்னேறுவதற்கான உந்து சக்தியாக அமைகிறது என்றார்.
வடலிகள் வானுயர்ந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
வடக்கில பனை மரங்கள் வளர்த்ததை விட அழித்ததுதான் அதிகம். பனங் காடாக இருந்த யாழ்ப்பாணம் இப்பொழுது பனை மரங்களை காண்பதே அரிதாக இருக்கிறது.
வடக்கில் பனங்கொட்டைகள் நடாத இடமில்லை, வல்வை வெளி, காக்கை வெளி, மண்டைதீவு உட்பட எங்கு வெளி இருக்கின்றனவோ, அங்கெல்லாம் பனங் கொட்டைகள் நடப்பட்டன.
நடப்பட்ட பனங்கொட்டைகளுக்கு என்ன நடந்தது என்று நட்டவர்கள் போய்ப் பார்த்தார்களா? நட்டு படம் எடுத்து முகப்புத்தகத்தில் படம் போட்டதுடன் அதன் கதை முடிந்தது.
பனங்கொட்டை நடுதல் என்பது கடந்த காலங்களில் தொடர்ந்து இடம்பெற்று வந்தது. இப்பொழுது பனங்கொட்டை நடுவது குறைந்துவிட்டது.
ஆனால் பனை மரத்தில் வரும் பொருள்களை பயன்படுத்தி கண்காட்சிகள், பனைசார் பொருள் உணவுத் திருவிழா என்று ஆடம்பரமாக நடத்துவதற்கு குறைவில்லை.
நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்று சொல்ல வரவில்லை.
எவ்வளவு அழகாக பெயர் சொல்லும் படி இந்த பனைசார் பொருள்களை வைத்து நிகழ்வு செய்பவர்கள் பனைமரம் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வையும் மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.
இதன் மூலம் பனைமரங்களை பாதுகாப்பதுடன் விருத்தி செய்யவும் முடியும்.
இனிவரும் காலம் ஒரு பனை மரத்தை தறிப்பது என்றாலும் முறையாக அனுமதி எடுத்து தறிக்கவும்.
அனுமதி வழங்கும் அரச துறையைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் இருந்திருந்தால் வடக்கில பனை மரங்கள் அழிவடைவதை தடுத்திருக்கலாம்.
அவர்களிடம் மட்டுமல்ல பொறுப்பு மக்களிடமும் இருக்கிறது. பொறுப்புடன் செயற்படுங்கள்.
அழிவடைந்து வரும் பனையைக் காக்கவும் பனை சார் உணவு மற்றும் ஏனைய நன்மைகளை அனுபவித்து ஆரோக்கியம் பெறவும் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினரிடம் கடத்தும் நோக்கிலும் 'பனை இருந்தால் பஞ்சம் இல்லை' எனும் தொனிப் பொருளில் பனைத்திருவிழா சுழிபுரம் திருவடி நிலையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பனைசார் உணவுகளான நுங்கு, பதனீர், பனங்காய் பணியாரம் மற்றும் கூழ் போன்ற பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டன.
தொடர்ந்து பனைசார் உரையாடல்கள், விளையாட்டுகள் என்பன இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வை செய்தவர்களுக்கு பாராட்டு குவிகிறது. நிகழ்வுக்கு சென்றவர்கள் பெரு மகிழ்வுடனும் நிகழ்வில் கலந்து கொண்ட திருப்தியுடனும் வந்தனர்.
இந்த நிகழ்வு செய்த இடத்தில் எத்தனை பனை மரம் நிற்கிறது என்பதையும் பாருங்கள்.
இந்த நிகழ்வு எமது மண்ணில் இன்று புதிதாக இடம்பெற்ற நிகழ்வும் அல்ல. கடந்த காலம் பனங்கூடலுக்குள் நின்று இந்த நிகழ்வை செய்தார்கள்.
அந்த பனைமரங்கள் எங்கே? ஒரு கணம் சிந்தியுங்கள். எங்களால் முடியும்.