இந்தியாவுடன் பேசுவதற்கும் தயார்.-- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவிப்பு

2 months ago



இந்தியா வளர்ந்து வரும் வல்லரசு என்ற அடிப்படையில் அதன் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அடிப்படையில் தமிழ்த் தேசத்தை அதன் பாதுகாப்பு கவசமாக கருதும். தேர்தலுக்கு பின்னர் வடக்கு- கிழக்கில் தனிப் பெரும் கட்சியாக வலுவடைந்து இந்தியாவுடன் பேசுவதற்கும் தயாராக உள்ளோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

மீனவர் பிரச்சினை தீராத பிரச்னையாக உள்ளது. எங்களுடைய கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றபோது அது தொடர்பில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது இந்தியா எங்களுடன் வந்து பேசக்கூடும்.

அதேபோன்று தங்களது பூகோள நலன்கள் சார்ந்த விடயங்களில் தங்கள் கருத்துகளை எங்களுடன் வந்து பகிர்ந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை பூகோள விடயங்கள் தொடர்பில் எங்களுடன் பேசுவது நல்ல விடயம். யாரோடு பேசினாலும் பேசப்படுவதில் எந்தத் தவறும் இல்லை.

இந்தியாவின் நலன்கள் சம்பந்தப் பட்ட விடயத்தில் நாங்கள் ஒத்த கருத்தில் வருவதில் என்னைப் பொறுத்தவரை எந்த தவறும் இல்லை.

அயல் நாடு என்ற வகையில் வளர்ந்து வரும் வல்லரசு என்ற வகையில் இந்தியாவுக்கு தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்கள் நிச்சயமாக உண்டு.

இந்தியாவுக்கு நாங்கள் தான் அயல் தேசம். சிங்கள தேசம் அல்ல. தமிழ்த் தேசம் தான் அயல் தேசம். அப்படி என்றால் தமிழ்த் தேசத்தை ஒரு பாதுகாப்பு கவசமாகத் தன்னும் பார்க்கும் அந்த தேவை அவர்களுக்கு இருக்கும்.

அந்த இடத்தில நாங்கள் அவர்களுடன் மனம் திறந்து கதைப்பதும் அவர்களுடைய தேவைகளை எங்களுடன் வந்து பகிர்ந்து கொள்வதிலும் ஒரு தவறும் இல்லை.

ஆனால் இந்தியாவின் நலன்களுக்காக எங்களுடைய நலன்களை விட்டு பாதிப்பு வரக்கூடிய வகையில் நாங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

அந்த இடத்தில் இந்தியா கேட்பதில் தவறு இல்லாமல் இருக்கும். ஏனென்றால் தன்னுடைய நலன்கள் சார்ந்த விடயத்தில் அவர்கள் கேட்கத் தான் வேண்டும்.

ஆனால் அதற்கு நாங்கள் இணங்குவது ஒருபோதிலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயம் இல்லை.

உதாரணத்திற்கு 13 ஆவது திருத்தத்தை எடுத்துக் கொண்டால் இந்தியா அதனை வலியுறுத்துவதற்கான பிரதான காரணம் அவர்களுடைய பயம்.

13 ஆவது திருத்தத்தை தமிழ் மக்கள் நிராகரித்தால் அது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தையே சிறீலங்கா நிராகரிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கும்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

விசேடமாக ஒப்பந்த இணைப்புகளில் ரஜீவ் - ஜே.ஆர். இடையே பரிமாறப்பட்ட கடிதங்கள் இணைக்கப்பட்டிருக்கிறது.

அவற்றில் சிறிலங்கா இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயத் துக்கு வாக்குறுதிகள் வழங்கியிருக்கிறது.

ஆனால் எங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கும் 13 ஆவது திருத்தத்துக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துச் சொல்லி இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்க முடியாது என்பதனை நாங்கள் தெளிவாக கூறவேண்டும்.

முற்று முழுதாக தமிழ் மக்களுடைய நலன்களை கைவிட்டு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் போகும் செயற்பாடுகளை ஏற்க முடியாது.

அந்த ஒரு விடயத்தில் மட்டும் தான் கடுமையாக விமர்சித்து வருகின்றோம்.

எங்களுடைய நலன்களை கைவிட்டு விட்டு வேறு ஒரு தரப்பினரது நலன்களுக்காக முடிவுகளை எடுப்பது என்பது ஏற்கமுடியாத விடயம் என்றார். 

அண்மைய பதிவுகள்