கறுப்பு ஜூலை இனப்படுகொலை கனடிய தமிழர் பேரவை தெரிவிப்பு

6 months ago


சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு எதிரான கட்ட மைக்கப்பட்ட இனப்படுகொலைகள் மறைமுகமாக ஆரம்பிக்கப் பட்டிருந்தாலும் கறுப்பு ஜூலை ஒரு வெளிப்படையான இனப்படுகொலைச் செயலாகும் என கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. 

கறுப்பு ஜூலை தொடர்பில் கனடியத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

'தமிழர் வரலாற்றில் சோகமான அத்தியாயமான கறுப்பு ஜூலையின் 41 ஆவது ஆண்டு நினைவு இந்த ஆண்டு அனுஷ்ட்டிக்கப்படுகின்றது. ஜூலை 1983 இல், வன்முறைக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவர்களது வீடுகள் எரிக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன.

சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக் கப்பட்ட இனப்படுகொலைகள் மறை முகமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கறுப்பு ஜூலை ஒரு வெளிப்படையான இனப்படுகொலைச் செயலாகும். பல தமிழர்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி உலகம் முழுவதும் தஞ்சம் புக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பெரும் துன்பங்களின் காலம் அது.

‘தமிழன் இல்லாத தேசம் இல்லை, தமிழனுக்கு என்றொரு தேசமும் இல்லை'. இந்த உறுத்தலான உண்மை, நமது வரலாற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு அவை மாற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது என்பதை உறுதிப்படுத்துகிறது.

கறுப்பு ஜூலையில் உயிர் பிழைத்த வர்களிடமிருந்து சாட்சியங்களை சேகரித்து ஆவணப்படுத்துவதற்கு கனடிய தமிழர் பேரவை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. நாங்கள் ஏற்கனவே பல கதைகளை ஆவணப் படுத்தியுள்ளோம், இப்போது இந்த முக்கியமான வேலையைத் தொடர உங்கள் உதவி தேவை. இந்த கொடிய நினைவுகளை அனுபவித்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று தங்கள் உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். நமது வருங்கால சந்ததியினர், நமது வரலாற்றில் இந்த இருண்ட காலகட்டத்தைப் புரிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் உங்கள் வலி, இழப்பு மற்றும் மீண்டெழுந்த கதைகள் முக்கியமானவை.

நாம் அமைதியாக இருந்தால், இந்த கதைகள் என்றென்றும் யாருக்கும் கடத்தப்படாமல் நீர்த்துப்போய்விடும். உலகெங்கிலும் உள்ள இந்தக் கொடிய நாள்களை கடந்து உயிர் மீண்டவர்கள் முன் வந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கி றோம். அவ்வாறு செய்வதன் மூலம், நமது வரலாறு பாதுகாக்கப்படுவதை யும், நமது வருங்கால சந்ததியினர் நாம் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி அறிந்து கொள்வதையும் உறுதி செய்ய முடியும்.

உங்களுக்குத் தெரிந்த இந்த கொடிய நாள்களை கடந்து வந்தவர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்துகொள்வதோடு சாட்சியமளிக்க அவர்களை ஊக்கு விக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். எங்கள் சமூகம் மிகுந்த வலியையும், துரோகத்தையும், துன்பத்தையும் தாங்கிக் கொண்டது. ஆனால் நாங்கள் ஒருபோதும் நம்பிக்கை இழந்தவர்கள் இல்லை. நாங்கள் தொடர்ந்து நீதிக்காக போராடுகிறோம், நியாயமான தீர்வுக்காக வாதிடுகிறோம்.

கறுப்பு ஜூலையின் 41 ஆவது ஆண்டை நாம் நினைவுகூரும் அதே வேளை இந்த கருப்பு நாள்களிற்கு சாட்சியமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் முன்வந்து அவர்களின் கதைகளை எதிர்காலத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் அழைக்கி றோம். கறுப்பு ஜூலையின் நினைவை என்றும் மறக்க முடியாது என்பதை உறுதி செய்வோம்.

எங்கள் கறுப்பு ஜூலை இணையதளத்தில் இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட அனைத்து கதைகளையும் நீங்கள் பார்க்கலாம்: blackjuly83.com.

கறுப்பு ஜூலை நாட்களை நேரில் கண்ட சாட்சியமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை அழைக்கின்றோம்: உங்கள் கதைகளை உலகிற்கு பகிருங்கள்.

நீங்கள் கறுப்பு ஜூலை கலவரத்தின் சாட்சியாக இருந்திருந்தால் உங்கள் குரல் எங்களுக்குத் தேவை. உங்கள் சாட்சியைப் பகிர்வதன் மூலம் எங்கள் வரலாற்றைப் பாதுகாக்க உதவுங்கள். இந்த முக்கியமான ஆவணப்படுத்தலில் பங்கேற்க கனடியத் தமிழர் பேரவையைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் நினைவுகள் முக்கியமானவை. - என்று உள்ளது.

அண்மைய பதிவுகள்