ஈழத்தமிழர்களின் சர்வஜன வாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்- அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் ஆதரவு தெரிவித்து உரை
ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தினை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.
ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை கோரும் மற்றும் ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என அங்கீகரிக்கவேண்டும் என கோரும் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அதனை வரவேற்றுள்ளனர்.
தீர்மானம்சமர்ப்பிக்கப்பட்டு உரைகள் ஆற்றப்பட்ட பின்னர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் காங்கிரஸ் நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டனர் .
இந்த நிகழ்வில் அமெரிக்காவை சேர்ந்த 100க்கும் அதிகமான தமிழர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 வருடத்தினை நினைவேந்துவதற்கு உலகம்எங்கிலும் உள்ள ஈழத்தமிழர்கள் தயாராகிவந்த நிலையிலேயே இந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த தீர்மானம் இழப்பை நினைகூருகின்றது ஆனால் தமிழர்களை எதிர்கால வன்முறைகள் பாரபட்சங்களில் இருந்து பாதுகாக்க முயல்கின்றது என தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பித்த சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர் வில்லே நிக்கல் தெரிவித்தார்.
எனது தீர்மானம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அங்கீகரிக்கின்றது ஜனநாயக வழிமுறைகள் மூலம் சுயநிர்ணய உரிமைக்கான தமிழர்களின் உரிமையை வலியுறுத்துகின்றது என தெரிவித்த அவர் இலங்கையில் தொடரும் பதற்றங்களிற்கு அமைதியான ஜனநாயக தீர்வுகள் அவசியம் என்பதை தீர்மானம் வலியுறுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார்.
இந்த தீர்மானம் சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பை முன்வைக்கின்றது. இவ்வாறான அணுகுமுறை உலகின் பல பகுதிகளில் பின்பற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இலங்கையின் வரலாற்றின் இருள்படிந்த அத்தியாயங்களின் முடிவை நாங்கள் நினைவுகூரும் அதேவேளை நாங்கள் எதிர்காலத்தை நோக்கியும் சிந்திக்கவேண்டும் என குறிப்பிட்ட வில்லே நிக்கெல் இந்த எதிர்காலம் அனைத்து மக்களினதும் உரிமைகளும் கௌரவமும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக காணப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.
எங்களால் இதனை செய்ய முடியும் நாங்கள் இணைந்து நிற்போம் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிப்பதற்கு தமிழர்களிற்கு உள்ள உரிமையை மதிக்கும் ஜனநாயக அமைதி தீர்விற்காக பரப்புரை செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கான ஆதரவு மெதுவாக ஆனால் நிச்சயமாக அதிகரிப்பதை நாங்கள் காணமுடிகின்றது அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர் ஈழத்தமிழர்கள் விவகாரத்திற்கு அமெரிக்க காங்கிரஸின் இரு கட்சிகளினதும் ஆதரவு உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த முக்கியமான தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உள்ள எனது சகாக்களை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்த அவர் இது முன்னுதாரணத்தின் மூலம் தலைமை வகிப்பதற்கான சிறந்த உதாரணம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளிற்காக குரல்கொடுப்பதற்கான தமிழ்மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எனவும் குறிப்பிட்டார்.
இலங்கை தமிழர்களின் கதை போராட்டங்களின் கதைகளில் ஒன்று என தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் டொம் டேவிஸ் எங்கு அநீதி நிலவினாலும் அது நீதிக்கு அச்சுறுத்தலே என மார்ட்டின் லூதர் கிங் தெரிவித்ததை நினைவுபடுத்துகின்றேன் எனவும் தெரிவித்தார்.
தமிழர்களிற்கு எதிரான அநீதி உலகில் நீதிக்கான அச்சுறுத்தல் என குறிப்பிட்ட அவர் 2009 இனப்படுகொலைக்கு இட்டுச்சென்ற துயரமான சம்பவங்கள் பாராபட்சத்தின் கொடுமைகளை நினைவுபடுத்துகின்றன எனவும் தெரிவித்தார்.