ட்ரம்பின் மிரட்டலுக்கு அடி பணிகின்றது கனடா எல்லைப் பாதுகாப்பு தொடர்பில் உடனடி முடிவு
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கடுமையான வரி விதிக்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளமையின் தொடர்ச்சியாக, கனடா - அமெரிக்கா எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த கனடா அரசு முடிவு செய்துள்ளது.
சமூக ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், கையெழுத்திடும் முதல் ஆவணங்களில் ஒன்று, கனடா, மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பது தொடர்பானதுதான் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் போதைப் பொருள்களையும், புலம்பெயர்ந்தோரையும் கனடா, மெக்சிகோ போன்ற நாடுகள் கட்டுப்படுத்தும் வரை இந்த வரிவிதிப்பு அமுலில் இருக்கும் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
ட்ரம்ப் மிரட்டலின் தொடர்ச்சியாக, கனடா - அமெரிக்கா எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த கனடா அரசு முடிவு செய்துள்ளது.
புதன் கிழமையன்று இந்த விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்களை சந்தித்த கனடா பொது பாதுகாப்புத் துறை அமைச்சரான டொமினிக் லிபிளாங்க், கனடா அரசு, எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, கூடுதல் முதலீடுகள் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால், அது தொடர்பான விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
மேலும், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் முறையான அனுமதியின்றி மக்கள் நுழைவதைத், கனடா அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க இருப்பதாகவும் கனடா பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
ட்ரம்ப் வரி விதிக்க இருப்பதாக மிரட்டியதைத் தொடர்ந்து கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ மாகாண பிரீமியர்களை அவசரமாக சந்தித்தார்.
அவர்கள் ட்ரம்பின் மிரட்டல் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதைத் தொடர்ந்தே அமைச்சர் டொமினிக் லிபிளாங்க் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, கூடுதல் முதலீடுகள் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளதென குறிப்பிடத்தக்கது.