இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பெற்றோலியக் குழாய் இணைப்பு திட்டம் சாத்தியப்படக் கூடியதா?பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் விளக்கம்

1 month ago



இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள பல்துறை பெற்றோலிய குழாய் இணைப்பு, அரசியல் ரீதியாக சாத்தியமானதாக இல்லாவிட்டாலும், பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருந்தால் மட்டுமே நிறைவேறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டபிள்யூ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் சாத்தியக் கூறுகளை இரு தரப்பினரும் தற்போது மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

திட்டத்தின் சாத்தியக்கூறுகளை நாங்கள் மதிப்பிடுவோம். அது சாத்தியமானால் மட்டுமே முன்னேற்றம் இடம்பெறும். அரசியல் காரணங்களுக்காக அதை முடிவு செய்ய முடியாது.

இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய முத்தரப்பு திட்டமாக இது முன்மொழியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசெம்பரில் ஜனாதிபதி புதுடில்லிக்கு விஜயம் செய்தபோது இந்தத் திட்டம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு ஆரம்ப கட்ட இணக்கப்பாட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி இணைப்பின் ஒரு பகுதியாகும். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான மின் கட்ட இணைப்புக்கான திட்டமும் இதன்மூலம் சாத்தியமாகும்.

இதற்கிடையில், திறந்த சந்தையில் இருந்து விலைமனுக் கோரல் செயல்முறை மூலம் எரிபொருள் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கட்டாரில் இருந்து நேரடியாக எரிபொருள் கொள்முதல் செய்வது குறித்து இலங்கை பரிசீலித்து வருகிறது.-என்றார்.