ஆள்கடத்தலுக்கு இடமில்லை, இந்தப் பயங்கரமான வர்த்தகம் ஒருபோதும் பலனளிக்காது.-- இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ட்ரூ பற்றிக் தெரிவிப்பு

ஆள்கடத்தலுக்கு நமது சமூகத்தில் இடமில்லை, இந்தப் பயங்கரமான வர்த்தகம் ஒருபோதும் பலனளிக்காது என்பதை உறுதிப்படுத்துவோம் என்று இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ட்ரூ பற்றிக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
பிரிட்டன் உட்படப் பல அரசாங்கங்கள், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்தும் ஆள்கடத்தல் எனும் கொடூரத்தை எதிர்கொள்வதில் கவனத்தை குவித்துள்ளன.
அதிகமான மக்கள் குற்றவாளிகளுக்கு பெருந்தொகை பணத்தைச் செலுத்துகிறார்கள். பின்னர் சுரண்டப்படுகிறார்கள் நவீன அடிமைத் தனத்துக்குள் தள்ளப்படுகிறார்கள்.
அல்லது ஆபத்தான பயணங்களை மேற் கொள்வதன் மூலம் துரதிர்ஷ்டவசமாக தங்கள் வாழ்வை இழக்கிறார்கள்.
புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு கவுன்ஸிலில் வெளியுறவு அமைச்சர் ஹேரத் அண்மையில் தெரிவித்த கருத்துகளை நான் வரவேற்கிறேன்.
அங்கு அவர் பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் வழக்கமான இடம்பெயர்வுப் பாதைகளை மேம்படுத்துவதன் அவசியத்தைப் பற்றிப் பேசினார்.
இந்த கடிமான பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான இலங்கையின் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.
யாரும் ஏமாறக் கூடாது ஆள் கடத்தல்காரர் என்ன சொன்னாலும் டியாகோ கார்சியா பிரிட்டனுக்குச் செல்லும் பாதை அல்ல.
அனைத்துக்கும் மேலாக டியாகோ கார்சியா ஓர் இராணுவத் தளமாகும்.
எனவே புலம்பெயர்ந்தோருக்கு பொருத்தமான இடமாக ஒருபோதும் அது இருந்ததில்லை.
எந்தவொரு புலம் பெயர்ந்தவர்களும் எதிர்காலத்தில் தீவுகளுக்கு மிகவும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டால், அவர்கள் இலங்கையில் இருந்து 10 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள தொலைதூர தீவான செயின்ட் ஹெலினாவுக்கு மாற்றப்படுவார்கள்.
அவர்கள் செயின்ட் ஹெலினா அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் வருவதுடன் ஒருபோதும் இங்கிலாந்துக்கு மாற்றமாட்டார்கள்.
சந்தேகத்துக்குரிய கடத்தல் காரர்களைக் கண்டறியவும், அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வேலைக்கு அமர்த்தும் தொழில் வழங்குநர்களுக்கு தடைவிதிக்கவும். பிரிட்டனில் இருக்க உரிமை இல்லாதவர்களை அங்கிருந்து வெளியேற்ற விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஐக்கிய இராச்சிய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆள்கடத்தல்காரர்கள் பணத்தைப் பெறுவதில் குறியாக இருப்பார்களே தவிர. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பொருட்படுத்துவதில்லை. அவர்களின் இந்த வணிக மாதிரிகளை அகற்றி அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம்.
சிறந்த வாழ்க்கையை அடைய வேண்டும் என்ற விருப்பமே இடம்பெயர்வுக்கான முதன்மையான உந்துதலாக இருப்பதையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
அதனால்தான் மக்களின் இந்த நோக்கத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். 2023 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் பவுண் பெறுமதியான இலங்கைப் பொருள்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்ததன் மூலம் ஐக்கிய இராச்சியம் இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக விளங்குகிறது.
இலங்கையில் உழைக்கும் மக்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
இலங்கையில் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் எமது இரு நாடுகளையும் பாதுகாப்பானதாகவும் வளமானதாகவும் மாற்றுவோம்.
நிச்சயமாக பல இலங்கையர்கள் பிரிட்டனுக்கு பார்வையாளர்களாகவும் கல்வி கற்கவும் வேலை செய்யவும் வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் அவற்றை விசா வழிமுறைகள் ஊடாக பாதுகாப்பாகவும் சட்டபூர்வமாகவும் மேற்கொள்கிறார்கள்.
கொழும்பில் இருந்து லண்டன் வரை ஆட்கடத்தலுக்கு நமது சமூகத்தில் இடமில்லை.
இந்தப் பயங்கரமான வர்த்தகம் ஒருபோதும் பலனளிக்காது என்பதை உறுதிப்படுத்துவோம் என்றுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
