அரசியல் மயமாகாமையும் தேசமாய் அணி திரளாமையுமே தமிழர்கள் பலவீனமாகப் போகக் காரணம்--மாணவர் ஒன்றியம் அறிவிப்பு
தமிழ் மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் மயப்படுத்தப்படாமையும் தேசமாய் அணி திரட்டப்படாமையுமே அனைத்துத் தளங்களிலும் பலவீனப்பட்ட மக்களாய்ப் போகக் காரணம்.
தமிழ் மக்களின் அரசியல் தனியே அடையாளத்திற்கானதன்று. அது இறைமைக்கானது. தமிழ்த் தேசியம் என்பது வாழ்க்கை முறை, அதனை தேர்தல்க் கால வெற்றுக் கோசமாக மாற்றியமைத்தது சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலுக்கு துணை போன தமிழ் அரசியல் கட்சிகளே".
இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய ஊடக மற்றும் வெகு சனத் தொடர்புப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நாங்கள் எமது தாயகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதல் மற்றும் பொருண்மிய வளங்களை ஒன்று திரட்டி தற்சார்புப் பொருளாதாரத்தை முன்னெடுக்காமையும், ஆதிக்க சக்திகளையும் பகை முரண்களையும் கையாள்வதில் உரிய தந்திரோபாயங்களை வகுக்காமையுமே அவர்களிடமே சரணாகதியடைந்த தமிழ் அரசியலால் இதுவரை காலமும் விளைந்ததொன்று.
முற்போக்கு அம்சங்களைக் கொண்ட புதிய மாறுதல்களுக்குத் தமிழ்த் தேசிய அரசியல் தயாராக வேண்டிய தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் கூட்டு முகவராண்மையைச் சிதைப்பதற்கு தமிழ்த் தேசிய போலிகள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் நாங்கள் அனைவரும் தமிழ்த் தேசிய அரசியல் பண்பாட்டினை அறிவுபூர்வமாக விழிப்புடன் அணுகுவதற்கு முன்வர வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகமாக அனைவரையும் சமூகப் பொறுப்புடன் வேண்டி நிற்கின்றோம்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளது.