கிளிநொச்சி, கௌதாரிமுனையில் மண் அகழ்வுக்கு இனிமேல் அனுமதியில்லை.--அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவிப்பு
கிளிநொச்சி, கௌதாரிமுனையில் மண் அகழ்வுக்கு இனிமேல் அனுமதி கொடுக்க வேண்டாம் என்று மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நேற்றைதினம் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கௌதாரிமுனை ஒரு முக்கியமான பிரதேசம். அந்த இடம் சம்பந்தமாக உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
அதனைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, மண் அகழ்வுக்கு இனிமேல் அனுமதி கொடுக்க வேண்டாம்.
இது இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் தீர்மானம். இந்த முடிவுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், இன்று (நேற்று) தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டது என்பதற்காக இதற்கு முந்தைய திகதிக்கு முன்னர் அனுமதி கொடுக்கப்பட்டது போன்று திகதியிட்டும் அனுமதி கொடுக்கப்படக்கூடாது- என்றார்.