வானிலை எச்சரிக்கைகளை செயல்படுத்த, இயற்கை பேரழிவை குறைக்க ஜப்பானின் நிதியுதவியில் டொப்ளர் ராடர் வலையமைப்பை நிறுவ புத்தளத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு
வானிலை மதிப்பீடுகளின் துல்லியத்தை கணிசமாக மேம்படுத்தவும் நம்பகமான வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை செயல்படுத்தவும் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கவும் ஜப்பானின் நிதியுதவியில் டொப்ளர் ராடர் வலையமைப்பை நிறுவுவதற்கான அடிக்கால் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
புத்தளத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற டொப்ளர் ராடர் வலையமைப்பை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜப்பான் தூதரகத்தின் துணைத் தலைவர் கமோஷிதா நவோக்கி கலந்துகொண்டார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி தர்மதிலக மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஜப்பானிய மானிய உதவியினால் நிதியளிக்கப்பட்ட டொப்ளர் ராடர் வலையமைப்பு இலங்கையில் நிகழ்நேர மழைவீழ்ச்சியைக் கண்காணிப்பதற்கான திறனை மேம்படுத்துவதையும் வானிலை தொடர்பான அனர்த்தங்களின் தாக்கத்தைத் தணிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.