திருகோணமலை உவர்மலை வாழைமுனை (Plantan point) கீழ் சுற்றுவட்ட வீதி 36 வருடங்களுக்குப் பின்னர் திறந்து வைக்கப்பட்டது

1 month ago



திருகோணமலை உவர்மலை வாழை முனை (பிளாண்டன் பொயின்ற் Plantan point) கீழ் சுற்றுவட்ட வீதி 36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியர் காலத்தில்        திருகோணமலை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கென இந்த முனைப் பகுதியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டது.

சுதந்திரத்தின் பின்னர் இன்று வரை இந்த இடத்தில் தொடர்ந்தும் இலங்கை இராணுவ முகாம் செயற்பட்டு வருகின்றது.

படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த உவர்மலையின் பின்பகுதியான கீழ் சுற்றுவட்ட வீதி படையினரால் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது

இதன்மூலம் உவர்மலை மத்திய  வீதியினூடாக செல்கின்ற மக்கள் ஆளுநர் செயலகம் அமைந்துள்ள உவர்மலை கீழ் வீதியினூடாக திரும்பி வரமுடியும்.

இவ்வீதி 36 வருடங்களுக்குப்        பின்னர் மக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டு மக்களின் பயணம் இலகுவாக்கப்பட்டுள்ளது.

இவ்வீதியானது 1988 ஆண்டு காலப் பகுதியில் மூடப்பட்டது.

இவ் வீதி மூடப்படும் வரை இதனூடாக பாடசாலை பஸ் சேவை ஒன்று நடைபெற்று வந்தது.

இப்பகுதிக்குச் சென்று      திருகோணமலையின் மற்றுமொரு இயற்கை அழகை இரசிக்க முடியும்.

திருகோணமலை பிறீமா தொழிற்சாலை, டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை என்பவற்றை இவ்விடத்தில் இருந்து குறுகிய தூரத்தில் பார்வையிடவும் முடியும்.

மேலும் இப்பகுதியில் உள்ள இராணுவ அருங்காட்சியகத்தையும் பார்வையிடலாம்.

அத்துடன் 22ஆம் படைப்பிரிவு அமைந்துள்ள வீதியூடான சுற்றுவட்ட வீதியை திறப்பதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகவும் படைத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் இரண்டு மாதகாலத்திற்குள் அவ்வீதியும் மக்களின்                      பாவனைக்காக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது திறக்கப்படுமானால் உவர்மலையில் உள்ள அனைத்து வீதிகளினூடாவும் சுற்றி வருகின்ற வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நல்லிணக்க செயற்பாடுகளில் ஒன்றாக இதனையும் காணமுடிகின்றது.

அண்மைய பதிவுகள்