தமிழரசுக்கட்சியின் வழக்கு 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

7 months ago

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவு தொடர்பில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த கட்டாணை உத்தரவு நேற்று மீண்டும் ஜூலை 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை எதிராளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனைகள் தொடர்பில் தமது தரப்பு அவதானங்களை வழக்காளியின் சட்டத்தரணி எடுத்துரைத்தார்.

ஏழு பிரதான எதிராளிகளும் மூன்று வெவ்வேறு விதமான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

அவற்றுக்கு இடையே இணக்கமான ஒரு நிலைப்பாட்டைக் கண்டு, சுமுகமாக விடயத்தைத் தீர்ப்பது சாத்தியமற்றது என்று வழக்காளி தரப்புச் சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டினார்.

இதன்போது எதிராளிகள் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணிகளான தவராசா மற்றும் புவிதரன் ஆகியோர் வழக்காளி கோரும் நிவாரணங்களை ஒருமித்து உடனடியாகவே வழங்க முடியும் என்று குறிப்பிட்டனர்.

எதிராளிகள் தரப்பில் தமக்காகத் தாமே நேரில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இந்த விடயத்தில் கட்சி ரீதியாக எதிராளிகள் அனைவரும் இப்போது ஒன்றுபட்ட தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் ஒரே நிலைப்பாட்டை பதில் மனுக்களாக அவர்கள் சமர்ப்பிப்பார்கள்.

அந்தச் சமர்ப்பணத்தின் அடிப்படையில் இணக்கமான முடிவு ஒன்றுக்கு வழக்காளியும் எதிராளிகளும் வரமுடியும். அவ்வாறு சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என்று குறிப்பிட்டார்.

அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அந்தப் பதில் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு ஜூலை 19ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி, வழக்கை அந்தத் திகதிக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையில், கிளிநொச்சியைச் சேர்ந்த கட்சி உறுப்பினரான சண்முகராஜா ஜீவராஜா என்பவர் தம்மையும் இடையீட்டு எதிராளியாகச் சேர்த்துக் கொள்ளும்படி விண்ணப்பித்தார்.

எதிராளிகள் தரப்பில் அவரை ஓர் எதிராளியாகச் சேர்த்துக் கொள்வதற்கு ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கப்படவில்லை.