பிரிட்டனில் ஜூலை 4-ஆம் திகதி நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார் இலங்கைத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட உமா குமரன்.இந்தத் தேர்தலில் லேபர் கட்சி பெருவெற்றி பெற்று 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
அந்தக் கட்சியின் சார்பில் தலைநகர் லண்டனில் பல்வேறு சமூகங்கள் செறிந்துவாழும் ஸ்ட்ராட்ஃபோர்ட் அண்ட் போ (Stratford and Bow) என்ற புதிய தொகுதியில் ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களைக் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் உமா குமரன் தோற்கடித்துள்ளார்.
உமா குமரனின் பெற்றோர், இலங்கையில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக 1980-களில் அங்கிருந்து வெளியேறி லண்டனில் குடியேறியவர்கள்.
36 வயதான உமா குமரன், லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் அரசியல் சிறப்பு இளங்கலைப் பட்டப்படிப்பையும் பொதுக் கொள்கை முதுகலைப் பட்டப் படிப்பையும் கற்றுள்ளார்.
இங்கிலாந்தின் தேசிய சுகாதாரத்துறை ஊழியராக (NHS) தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய உமா, இளவயதிலேயே லேபர் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார்.
அந்தக் கட்சியின் பல்வேறு தளங்களிலும் பல பொறுப்புக்களை வகித்துள்ள அவர், லண்டன் மாநகர மேயர் சாதிக் கானின் மூத்த ஆலோசகராகவும் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
சுமார் 100 உலக நகரங்கள் அங்கம் வகிக்கும் 'C40 Cities Climate Leadership Group' என்ற பருவநிலை மாற்றம் தொடர்பான குழுவின் ஊடாக ஐ.நா. உள்ளிட்டப் பல்வேறு பன்னாட்டுத் தளங்களிலும் பணியாற்றியுள்ள உமா, லண்டன் மாநாகரின் சில உள்ளூராட்சி மன்றங்களிலும் லேபர் கட்சியின் ஆலோசனைப் பீடத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
வடமேற்கு லண்டனின் ஹரோ பகுதியில் இரண்டு வெவ்வேறு தொகுதிகளில் 2010, 2015-ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
லேபர் கட்சித் தலைவர் கியர் ஸ்டாமரின் கீழ் சில முக்கிய அரசியல் பொறுப்புகளை வகித்திருந்த உமா, கிழக்கு லண்டனில் புதிதாக உருவாக்கப்பட்ட Stratford and Bow தொகுதியில் போட்டியிட்டு அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இம்முறை தெரிவாகியுள்ளார்.
எனது பெற்றோர் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிவந்தவர்கள்... எனது குடும்பமும் எம்மைப் போன்ற ஏனையவர்களும் இன்றுவரை அந்தப் போரின் வடுக்களுடேனேயே வாழ்கின்றோம்,” என்று தமது அதிகாரபூர்வ இணையதளத்தில் கூறியுள்ளார் உமா குமரன்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 650 உறுப்பினர்கள் கொண்ட பொதுமக்கள் அவையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை அதிக பெண்கள் தெரிவாகியுள்ளனர்.
இம்முறை வெற்றிபெற்றுள்ள 263 பெண்களில் இளவயது உறுப்பினர்களில் ஒருவராக உமா குமரனும் இடம்பிடித்துள்ளார். ( 2019-ஆம் ஆண்டு தேர்தலில் 220 பெண்கள் வெற்றிபெற்றிருந்தனர்.)
இம்முறை நாடாளுமன்றம் செல்லும் 335 புதிய முகங்களில் ஒருவரான உமா, இனச் சிறுபான்மை பின்புலத்தைக் கொண்ட 90 உறுப்பினர்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.
உமா குமரனின் வெற்றிக்கு அவரது ஆதாரவாளர்களைத் தாண்டி, பெருமளவிலான தமிழர்கள் உலகம் எங்கிலும் இருந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உமா குமரன் தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்," என அவரது X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"தமிழ் அகதிகளின் பிள்ளை நான். பாரபட்சத்தையும் ஒடுக்கு முறையையும் அனுபவித்த ஒரு சமூகத்தின் பிள்ளை நான். நியாயத்துக்காக நான் எப்போதும் போராடுவேன்," என்று தனது தேர்தல் வெற்றி உரையின்போது கூறினார் உமா குமரன்.
நன்றி BBC