தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் வளங்களைச் சூறையாடுவதை தடுக்க அரசு சட்டத்தைக் கடுமையாக்கி கைதுகளை செய்கிறது. அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவிப்பு

3 hours ago




தமிழக மீனவர்கள் எதேச்சதிகார போக்கில் இலங்கையின் கடல் வளங்களைச் சூறையாடுகின்றனர். 

அதனை தடுப்பதற்கே அரசாங்கம் சட்டத்தைக் கடுமையாக்கியுள்ளதுடன், கைதுகளையும் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அயலக தமிழர் மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகம் சென்றிருந்த அமைச்சர் சந்திரசேகரன் தமிழக ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்-

தமிழக மீனவர்களால் ஆந்திரா, கேரளா, குஜராத் அல்லது பாகிஸ்தான் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட முடியுமா?. ஆனால், இலங்கை கடல் பரப்பில் மாத்திரம் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதுடன், எதிர்கால தலைமுறையின் கடல்பரப்பையும் சூறையாடுகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயல்பாடுகள் குறித்து குறிப்பிடுவதில்லை.

யுத்தத்தால் நீண்டகாலம் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதுதான் ஓரளவு மீண்டெழும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களது வாழ்வாதாரம் சுரண்படும்போது அவர்களால் அடுத்தகட்டமாக என்ன செய்ய முடியும்?

ட்ரோலர் படகுகள் மற்றும் சுருக்கு வலைகளைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும் அதனையே தொடர்ச்சியாக பயன்படுத்துகின்றனர்.

ஒரு சில மீனவர்கள்தான் இவ்வாறு செயல்படுகின்றனர். தமிழக மீனவர்கள் எதேச் சதிரகாரப் போக்கில் இலங்கையின் கடல்வளங்களை சூறையாடுகின்றனர்.

இந்த செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக முதல்வரிடம் நாம் கோருவது ஒன்றுதான். பொட்டம் ட்ரோலிங் முறைமை எனப்படும் ட்ரோலர் படகுகளில் சட்ட விரோதமாக மீன்பிடியில் தமிழக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அந்த முறையை தடை செய்ய வேண்டும். இலங்கையில் சட்டவிரோத மீன்பிடி முறை தடைசெய்யப்பட்டுள்ளது.

எமது எதிர்கால சந்ததியினருக்கு கடல்வளத்தை பாதுகாத்து கொடுக்க வேண்டும்.

அதனையே இந்தியாவிடமும் தமிழக முதல்வரிடமும் கோருகிறோம் - என்றார்.


அண்மைய பதிவுகள்