தமிழ் மக்களை ஒரு மையத்தில் ஒன்றிணைப்பது என்ற விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், எமக்குமிடையே வேறுபாடுகள் இருக்கவில்லை.
எம்மைச் சந்திக்கும் பொழுது அவர் பொதுவேட்பாளரை நிராகரிப்பதற்கு ஒரு காரணத்தை வைத்திருந்தார்.
ஆனால் சந்திப்பு முடிந்த பொழுது பொதுவேட்பாளரை ஆதரிப்பதற்கு மிகப் பலமான ஒரு நடைமுறைக் காரணத்தை ஏற்றுக்கொண்டதைத் தெரிவித்துச் சென்றார் என சிவில் சமூகங்களின் கூட்டிணைவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிவில் சமூகங்களின் கூட்டிணைவால், தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படுவது தொடர்பில் அரசியல் கட்சிகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்குக் கடந்த மே 19 ஆம் திகதி வரையிலும் அவகாசம் கேட்டிருந்தார்.
மே 19 ஆம் திகதி நடந்த மத்திய குழுக்கூட்டத்தின் அடிப்படையில் அக்கட்சியானது அது தொடர்பான முடிவை இப்போதைக்கு எடுப்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
எனினும் கட்சிக்குள் ஒரு பகுதியினர் தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிக்கிறார்கள். அதற்கு ஆதரவாகப் பொது வெளியில் பேசியும் வருகிறார்கள்.
செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களுடனான கலந்துரையாடலின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவில் உறுதியாக உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டது.
பொதுவேட்பாளர், தேர்தல் புறக்கணிப்பு ஆகிய இரண்டும் ஏறக்குறைய ஒரே அடிப்படையைக் கொண்டவை என்பதை அந்தக்கட்சி ஏற்றுக்கொள்கின்றது.
எனினும் இரண்டு தெரிவுகளிலும் பொதுவேட்பாளரில் தான் ஆபத்து அதிகம் என்று அந்தக் கட்சி நம்புகின்றது.
அந்த அடிப்படையில் அவர்கள் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவைத் தெரிவித்தார்கள்.
விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியானது தொடக்கத்திலிருந்தே பொதுவேட்பாளரை ஆதரித்து வருகிறது. இந்த விடயத்தில் பொது மக்கள் அமைப்புகளின் முன்னெடுப்புக்கு அக்கட்சி தனது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட்டாக முடிவெடுத்து அறிவிப்பதற்குக் கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள்.
எனினும் கூட்டுக்குள் காணப்படும் ஈ.பி. ஆர்.எல்.எப். கட்சியானது தொடக்கத்திலிருந்தே பொதுவேட்பாளர் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தது. அதற்கு ஆதரவாகப் பொது வெளியில் பேசியும் வருகின்றது.
எம்முடனான சந்திப்பிலும் அந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுரேஷ் பிரேமச்சந்திரன் அதே நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தார்.
சந்திப்பில் கலந்துகொண்ட தமிழீழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார்.
எனினும் அது ஒரு சாதாரண விடயம் அல்ல என்பதனை வலியுறுத்தினார். தமிழ்ப்பொதுவேட்பாளர் தோற்கக்கூடாது. அதற்காகக்கடுமையாக உழைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கட்சிகளும் பொதுமக்கள் அமைப்புகளும் இணைந்த ஒரு கட்ட மைப்பு அவசியம் என்றும் அதற்குத் தாங்கள் தயார் எனவும் கூறினார்.
ஸ்ரீகாந்தா தமிழ்த் தேசியக்கட்சியானது பொதுவேட்பாளரை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறது. அதில் உள்ள சாதக, பாதகங்களை அந்தக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனநாயகப் போராளிகள் கட்சி, பொது வேட்பாளரை ஏற்றுக்கொள்கிறது.
அதற்காக பொதுமக்கள் அமைப்புகளோடு இணைந்து செயற்பட, தாம் தயார் என அதன் தலைவர் சி. வேந்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி அமைப்பு தமது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காகத் தர்மலிங்கம் சித்தார்த்தன் கால அவகாசம் கேட்டார்.
ஒரு தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவது என்ற விடயத்தை அக்கட்சி கொள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும், அதில் இருக்கக் கூடிய இடர்களைக் குறித்து அந்தக்கட்சி ஆழமாக யோசிக்கின்றது. எனவே தமது முடிவை அறிவிப்பதற்குக் கால அவகாசம் கேட்டது.
அங்கத்துவக் கட்சிகளில் அநேகமானவை தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்திய போதும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் அடிப்படையில் ஒன்று கூடி பொதுவேட்பாளர் தொடர்பான தம்முடைய உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கக் கால அவகாசம் கோரியிருக்கின்றனர்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொது வேட்பாளர் என்ற தெரிவைத் தொடக்கத்தில் இருந்தே ஆதரித்து வருகிறது. அதன் மேடைகளில் ஏற்கனவே அது தொடர்பாகப் பேசத் தொடங்கிவிட்டது.
எம்முடனான சந்திப்பிலும் பொ.ஐங்கரநேசன் அதே நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.
அனந்தி சசிதரனின் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் பொது வேட்பாளரைக் கொள்கையளவில் ஏற்றுக்கொள்கிறது.
அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றது. கட்சிகளுடனான சந்திப்புகளின் பின்னர் கட்சித்தலைவர்களைத் தவிர கட்சிகளுக்குள் ஜனாதிபதித் தேர்தலைக் குறித்துத் துலக்கமான வெளிப்படையான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளையும், கட்சிகளைச் சாராத அரசியல்வாதிகளையும் சந்தித்தோம்.
க.அருந்தவபாலன் பொது வேட்பாளர் என்ற தெரிவை முழுமையாக ஏற்றுக்கொள்கிறார். அதற்காக உழைக்கவும் தயாராக உள்ளார்.
எமது குழு தமிழரசுக் கட்சியின் தலைவரை உத்தியோகபூர்வமாக சந்தித்தது. எனினும் எதிர்காலத்தில் கட்சித் தலைமைக்காகப் போட்டியிடக்கூடிய இருவரையும் சந்திப்பது பொருத்தமானதாக இருக்குமென விதந்துரைக்கப்பட்டதால் சிவஞானம் சிறீதரனையும், எம்.ஏ.சுமந்திரனையும் சந்தித்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழரசுக் கட்சிக்குள் பொதுவேட்பாளர் என்று தெரிவைத் தொடர்ச்சியாக ஆதரித்து வருகிறார்.
அதற்கு ஆதரவாகப் பொது வெளியில் பேசியும் வருகிறார். எமது சந்திப்பிலும் தமது தனிப்பட்ட ஆதரவு நிலைப்பாட்டை அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன் பொதுவேட்பாளர் தொடர்பில் உள்ள ஆபத்துக்களைச் சுட்டிக்காட்டிக் கருத்துத் தெரிவித்தார்.
எனினும் தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்கு இது ஒரு சரியான தருணம் என்றும். இத்தேர்தலில் தமிழ் மக்களை ஒன்றுதிரட்டத்தவறினால் அடுத்த ஆண்டு நடக்கக்கூடிய எல்லாத் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் சிதறிவாக்களிப்பார்கள் என்பதையும் சுட்டிக்காட்டிய பொழுது அந்தத் தர்க்கத்தை அவர் ஏற்றுக்கொண்டார்.
பொதுவேட்பாளர் தேவையா என்பது தொடர்பாகப் பொதுவெளியில் உரையாடல்களை நடத்துவது நல்லது என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எனினும் பொதுவேட்பாளர் தொடர்பாக வவுனியாவில் கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதிநடைபெற்ற பொது மக்கள் அமைப்புகளின் கூட்டிணைவும், அதன் முன்னரும் பின்னரும் எம்மால் பல்வேறு மக்கள் அமைப்புகளுடன் நடத்தப்படும் கலந்துரையாடல்களும் பொது வெளியில் நடத்தப்படும் உரையாடல்களே வவுனியாவில் பொதுமக்கள் அமைப்புகளின் கூட்டிணைவுக்கும், பொதுவேட்பாளர் தொடர்பான கொள்கை அடிப்படைகளுக்கும், வவுனியாப் பிரகடனத்துக்கும் வழி வகுத்திருந்தன, இன்றும் வலுச்சேர்க்கின்றன.
இன்றுள்ள நிலையில் பொதுவேட்பாளர் தேவையா என்ற உரையாடலுக்குப் பதிலாகப் பொதுவேட்பாளர் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கை நிலைப்பாடுகளுக்கு ஆதரவைத் திரட்டும் உரையாடல்கள் நிகழ்வதே பொருத்தமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்புகள் பெருமளவுக்கு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தவை. ஏனைய மாவட்டங்களில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளோடும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், தற்போதைய உறுப்பினர்கள். ஏனைய அரசியற் பிரமுகர்கள் என்பவர்களுடனும் எதிர்காலத்தில் சந்திப்புகள் இடம்பெறும்.
அந்த சந்திப்புகளின் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
மேற்கண்ட சந்திப்புகளின் பின் பொதுமக்கள் அமைப்புகள் மீண்டும் விரைவில் நேரடியாகச் சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அச்சந்திப்பில் கட்சிகளின் நிலைப்பாடுகள் ஆராயப்படுவதுடன் பொது மக்கள் அமைப்புகளின் கூட்டிணைவின் அடுத்த கட்ட வேலைத் திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்த முடிவுகளும் மேற்கொள்ளப்படும், என்று ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.