பொறுப்புக் கூறலை புதுப்பிப்பது அவசியம் - சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிப்பு
இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துக்கான ஆணையை செப்ரெம்பர் அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை புதுப்பிப்பது மிகவும் அவசியம் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய - பசுபிக் இயக்குநர் எலைன் பியர்சன் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிவடைந்த உள்நாட்டு யுத்தத்தின் போது ஸ்ரீலங்கா படையினர் இழைத்த அநீதிகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.
இதன் காரணமாக உண்மை, நீதி, இழப்பீடு போன்றவற்றை வழங்குவதற்குப் பதிலாக ஸ்ரீலங்கா அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் சமூகத்தினரையும் மெளனமாக்க முயல்கின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், துஷ்பிரயோகங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் சர்வதேச நட வடிக்கைகள் அவசியம் என்பது புலனாகின்றது.
மே 18 ஆம் திகதி நினைவேந்தல் தினத்துக்கு முன்னர் வடக்கு-கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளை ஸ்ரீலங்காப் பொலிஸார் குழப்ப முயன்றனர்.
யுத்தத்தின்போது நிலவிய பட்டினி நிலையைக் குறிக்கும் விதத்தில் வழங்கப்படும் கஞ்சியை தயாரித்து வழங்கியமைக்காக நால்வரைக் கைதுசெய்து ஒருவாரம் தடுத்து வைத்திருந்தனர்.
காணாமற்போனவர்களின் உறவினர்கள் சிலரும் ஏனையவர்களும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதை தடைசெய்யும் விதத்தில் ஸ்ரீலங்கா பொலிஸார் நீதிமன்ற உத்தரவுகளையும் பெற்றிருந்தனர்.
சில இடங்களில் பொலிஸார் தலையிட்டு நிகழ்வுகளைத் தடுத்து மக்கள் அங்கு செல்வதை நிறுத்தினர்.
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி, வலிந்து காணாமலாக்கப்பட்டமை ஸ்ரீலங்காவில் இடம்பெற்றது என்பதையும் அதன் அளவையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உடனடி நம்பகத்தன்மை மிக்க விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும், மனிதப் புதைகுழிகளை தோண்டுவதற்கு சர்வதேச தொழில்நுட்ப உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் - என்றார்.