இலங்கை வரும் சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் குழு யாழ்.வரவுள்ளது

2 months ago



இலங்கைக்கு வருகை தரவுள்ள சீனாவின் நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் குழு யாழ்ப்பாணத்துக்கும் வரவுள்ளது.

ஐந்து நாள் பயணமாக எதிர்வரும் புதன்கிழமை இலங்கை வரும் இந்தக் குழு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்தித்து பேசவுள்ளது.

தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கும் கண்டி மாவட்டத்துக்கும் இந்தக் குழு வருகை தரவுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சீன ஆதரவுடனான திட்டங்கள் அண்மைக் காலமாக அதிகளவில் நடைபெறுகின்றன.

அத்துடன், சீன பிரமுகர்கள் வடக்கு, கிழக்குக்கு வருகை தரும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளன.

எனினும், சீனாவின் உயர் அமைச்சர் ஒருவர் வடக்குக்கு உத்தியோகபூர்வமாக வருகை தருவது அண்மைக் காலத்தில் இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள அமைச்சர் பான் யூ, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அமைச்சரவையில் முக்கிய உறுப்பினராவார்.

அத்துடன்,சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமாவார்.

பான் யூ இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.