இலங்கையின் சுதந்திர நாளில் யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியைக் கீழிறக்கிக் கறுப்புக் கொடி ஏற்றியவர்களை கைது செய்யவும் -- சரத் வீரசேகர கொக்கரிப்பு

2 months ago



இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியைக் கீழிறக்கிக் கறுப்புக் கொடியை ஏற்றியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும், அவர்களுக்குப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதா என்பது பற்றி விசாரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடமும் விளக்கம் கோரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:-

"இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக் கழகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கறுப்புப் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

தமிழ் நாளிதழ்களில் இது தொடர்பான செய்தி முதல் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டிய பல்கலைக்கழகத்தின் பிரதான கம்பத்தில் இருந்த கொடியே கீழ் இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

போரில் இருந்து இந்த நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த இராணுவத்தை அவமதிக்கும் வகையிலேயே இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.

எனவே, இவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

இதற்கு இடமளித்தமை குறித்து யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் குழாமும் பொறுப்புக்கூற வேண்டும். இது தொடர்பில் அவர்களிடம் விளக்கம் கோரப்பட வேண்டும்.

யாழ். பல்கலைக்கழகமும் மக்கள் வரிப்பணத்தில்தான் இயங்குகின்றது.

எனவே, தேசியக்கொடி அவமதிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும்.

இந்தச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யுமாறு கோருகின்றோம்.

சுதந்திர தினத்துக்கு முன்னதாக ஜனாதிபதி யாழ். சென்றார், மக்களுடன் கலந்துரையாடினார்.

இனவாதத்தைத் தூண்டுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெளிவாக அறிவித்திருந்தார்.

எனவே, தேசியக் கொடியை அவமதித்து, தென்னிலங்கையில் இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எமது நாட்டின் தேசியக்கொடியை ஏற்க மறுப்பவர்களைத் தேசத்துரோகிகளாகவே கருத வேண்டும்.

இவர்களுக்குப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதா என்பது பற்றி புலனாய்வுப் பிரிவு ஆராய வேண்டும்." - என்றார்.

அண்மைய பதிவுகள்