காணி கையகப்படுத்துவதற்கு எதிராக மக்கள் போராட்டம்

7 months ago

சுழிபுரம் கிழக்கு, காட்டுப்புலத்தில் உள்ள கடற்படை முகாமுக்காக பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்துவதற்கான அளவீட்டு நடவடிக்கைகள் இன்று(30) முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு பிரதேச மக்களும், காணி உரிமையாளர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

காணி கையகப்படுத்தும் முயற்சியைத் தடுப்பதற்கு அனைவரும் இன்று திரளவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம், சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள காட்டுப்புலம் கடற்படை முகாம் அமைந்துள்ள காணிகளை நிரந்தரமாகக் கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் இவ்வாறான முயற்சிகள் பொதுமக்களினதும், காணி உரிமையாளர்களினதும் கடும் எதிர்ப்பை அடுத்து தடைப்பட்டிருந்தன.

தற்போது மீண்டும் அந்தக்காணிகளைக் கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 9 மணிக்கு காணி அளவீட்டு நடவடிக்கைக்காக நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அங்கு வரவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தகவலை பிரதேச செயலரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

காணி கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக இன்று காலை பொதுமக்களும், அரசியல் கட்சிகளும், அந்தப் பகுதி சமூக மட்ட அமைப்புகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அண்மைய பதிவுகள்