தமிழ் பொது வேட்பாளர் தமிழரின் அரசியல் இருப்புக்கு தேவையா? என்ற தொனிப்பொருளிலான கலந்துரையாடல் 3ஆம் திகதி.
தமிழ் பொது வேட்பாளர் தமிழரின் அரசியல் இருப்புக்கு தேவையா? என்ற தொனிப்பொருளிலான கலந்துரையாடலுக்கு வவுனியா பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த அமைப்பினால் நேற்று (30.07.2024) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் சில சிவில் அமைப்புகளும் தமிழ் தேசியப் பரப்பில் உள்ள சில கட்சிகளும் ஒன்றிணைந்து எடுத்துள்ள தமிழ் பொது வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பான நிலைப்பாடு சாத்தியமானதா என்பது தொடர்பில் வவுனியா பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து வவுனியா மக்களினுடைய நிலைப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் அது தொடர்பிலான கருத்துக்கணிப்பை மேற்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளது.
இதுவரை காலமும் தமிழ் பொது வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பில் செயற்பட்டு வரும் சிவில் அமைப்புகள் சிலவும் தமிழ் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் சிலவும் வவுனியா பொது அமைப்புக்களுடன் எவ்விதமான கலந்துரையாடலையும் மேற்கொள்ளாத நிலையில், இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் என்ற ரீதியில் ஆக்கபூர்வமான செயல் நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படுத்தும் நோக்கோடு தற்காலத்தில் தமிழர்களின் அரசியல் இரும்புக்கு தமிழ் பொது வேட்பாளரின் தேவை அவசியமானதா என்பது தொடர்பான கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 3 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வாடி வீட்டில் இடம்பெறவுள்ளது.
எனவே ஆர்வமுள்ள தமிழ் அரசியல் பரப்பில் செயற்பாடு உள்ளவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரையும் அழைத்து நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.