திருக்குறளுக்கு உரையெழுதிய முதலாவது பெண் உரையாசிரியர் என்ற பெருமையைப் பெறும் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்.

4 months ago


திருக்குறளுக்கு உரையெழுதிய முதலாவது பெண் உரையாசிரியர் என்ற பெருமையைப் பெறும் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்.

தமிழின் அடையாளமாகக் கொள்ளப்படும் திருக்குறளுக்கு பல்வேறு உரையாசிரியர்களும் தத்தம் புரிதலுக்கேற்ப உரை வழங்கியுள்ளனர். பரிமேலழகர்;, மணக்குடவர், மு.வரதராசன், சாலமன் பாப்பையா என பிரபல உரையாசிரியர்களது உரைகள் இணைய வழியில் பெறக்கூடியதாக உள்ளன.  

பரிமேலழகர் உரைக்கு வை.மு.கோபாலகிருஸ்ணமாச்சாரியார், வடிவேலுச் செட்டியார் போன்ற பெரியோர்களது ஆராய்ச்சி உரைகளும் சிறப்பானவையாகப் போற்றப்படுகின்றன.

 எத்தனையோ உரையாசிரியர்கள் தோன்றினாலும் தற்காலத்திற்கேற்ற மொழி நடையில் உரைசெய்து புதுமை படைத்திருக்கிறார் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ். திருக்குறளுக்கு உரை செய்த முதலாவது பெண் அறிஞர் என்ற பெருமையையும் பெறுகின்றார். 

தமிழகத்தின் பிரபல பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆங்கிலத்தில் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருக்கிறார் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்க செய்தி. 

இலங்கையைப் பொறுத்த வரையில் பண்டிதர் வேலுப்பிள்ளை என்ற கோப்பாயைச் சேர்ந்த பெரியார் 1891 ஆம் ஆண்டு முப்பாநூற் சுருக்கம் என்ற நூலை வெளியீடு செய்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட சில அதிகராங்களுக்கு உரைநடையில் விளக்கம் எழுதி உள்ளார். இந்நூல் 2019 இல் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் மீளவும் வெளியிடப்பட்டது. 

மீசாலையைச் சேர்ந்த தமிழறிஞர் அ.பொ. செல்லையா திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வாழ்ந்தவர். அவர் திருக்குறளுக்கு சுருக்க உரை எழுதி பின் கனடா சென்று வாழ்ந்த போது வெளியிட்டுள்ளார்.

(எனக்கு அந்த நூல் கிடைக்கவில்லை) வித்துவான் சொக்கன் குறிப்பிட்ட சில அதிகாரங்களுக்கு உரை வகுத்துள்ளார். எழுத்தாளர் வரதர் ஆனந்தா அச்சகம் மூலம் திருக்குறள் முழுமைக்கும் சுருக்க உரை எழுதி வெளியிட்டதாக ஞாபகம். போர்க்காலத்தில் கோடிட்ட தாளில் (கோடடித்த தாளில் Foolscap Paper) அந்த நூல் வெளிவந்தது. 

முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் கொவிட் கால முடக்கத்தைச் சரியாகப் பயன்படுத்தி திருக்குறள் முழுமைக்கும் உரை வகுத்துள்ளார். குறட்பா, செய்யுள் பிரிப்பு, சொல்லுக்குச் சொல் உரை (சொற்பொருள்உரை), பொழிப்புரை, குறிப்புரை என இந்த உரை அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் எவர்கிறீன் பதிப்பகத்தார் நூலை வடிவமைத்துள்ளனர். 1400 இற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த நூலிற்கு 5000 ரூபா விலை அச்சிடப்பட்டுள்ளது. 

14.10.2023 இல் அகவை 80 இனை நிறைவு செய்த மனோன்மணி அம்மையாரின் 70 ஆவது நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இளைய தலைமுறையினருக்கு முக்கிய நாள்களில் (பிறந்தநாள்) பரிசு கொடுக்கக்கூடிய காலப் பெட்டகம். 


அண்மைய பதிவுகள்