ஜனாதிபதியும் அவர் சார்ந்த கட்சியும் புதிய அரசமைப்பாக எண்ணிய வரைபை நாங்கள் எதிர்க்கின்றோம்.-- எம்.பி பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவும் அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி பணிமனையில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசியம் சார்ந்த அரசியலுக்கும் கொள்கை சார்ந்த - தமிழ் மக்களுடைய இருப்பு சார்ந்த விடயங்களுக்கும் எதிர்காலத்தை மிகவும் சவாலுக்குரியதாகவே பார்க்கின்றோம்.
இதில் வரப்போகின்ற ஐந்து வருடங்களில் மிக முக்கியமானது வரப் போகின்ற முதலாவது வருடம்தான்.
தேர்தல் முடிவுக்குப் பிறகுகூட ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தங்களது கட்சிக்கு வடக்கில் ஆசனங்கள் கிடைத்துள்ளன என்றும் இனவாதத்தை மக்கள் நிராகரித்துள்ளனர் எனவும் சொல்லியுள்ளார்.
அந்தக் கருத்திலேயே தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய ஆபத்துகள் மிகத் தெளிவாக அம்பலமாகியுள்ளன.
தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் மக்களுடைய உரிமை சார்ந்த நிலைப்பாட்டுக்கு இத்தனை வருடங்களாக தமிழ் மக்கள் ஆணை வழங்கி வந்திருக்கின்ற நிலையில் அந்த ஆணையை இனவாதம் என்று சொல்லி கொச்சைப்படுத்துகின்ற வகையில் ரில்வின் சில்வா பேசியுள்ளார்.
உண்மையில், சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டை எடுத்து வந்திருக்கின்ற நிலையில் அந்தத் தமிழ்த் தேசிய நிலைப் பாட்டை இனவாத நிலைப்பாடாக கொச்சைப்படுத்தி இன்றைக்குத் தேர்தல் முறையில் உள்ள ஒரு சில முறைகளால் எண்ணிக்கையில் ஒரு சில ஆசனங்களை பெற்றுக். கொண்டதை வைத்துக்கொண்டு ஒட்டு மொத்த தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை நிராகரிக்கின்ற என்று சொல்கின்ற கருத்துக்கள் எந்தளவுக்கு ஆபத்து என்பதை எமது மக்கள் உணர வேண்டும்.
அந்த வகையில்தான் தேர்தல் காலத்திலும் நாம் எமது மக்களுக்கு தொடர்ச்சியாக ஒரு விடயத்தைச் சொல்லி வந்தோம்.
அதாவது இந்த அரசு தேர்தல் முடிந்த கையோடு 2015 முதல் 2019 வரை தயாரிக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய என்ற ஒற்றையாட்சி அரசமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று சொன்னோம்.
அந்த ஒற்றையாட்சி ஏக்கிய ராஜ்ஜியவை நிராகரித்து எங்களுடைய மக்களின் ஆணையைக் காட்டி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு தீர்வுக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுப்போம் என்ற கருத்தைத்தான் நாங்கள் சொல்லியிருந்தோம்.
எதிர்காலத்தில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற - சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி தீர்வை எட்டுவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கான செயல்பாடுகளை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.