ஆஸ்திரியா, போலந்து, செக் குடியரசு, ருமேனியா உள்ளிட்ட மத்திய ஐரோப்பிய நாடுகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆஸ்திரியா, போலந்து, செக் குடியரசு, ருமேனியா உள்ளிட்ட மத்திய ஐரோப்பிய நாடுகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
ஆயிரக் கணக்கானோர் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ள நிலையில், இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா முழுவதும் பரவலாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப் பெருக்கு இது எனக் கூறப்படுகிறது.
ருமேனியா, செக் குடியரசு, போலந்து மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. அத்தோடு அந்த நாட்டு அதிகாரிகள் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட தொடங்கியுள்ளனர்.
பல இடங்களில் பாலங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
போலந்து அரசு அவசர கால பேரிடர் நிலையை அறிவித்துள்ளது. போலந்தில் நைசா நகரில் உள்ள மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள வீதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் போக்குவரத்தும் நிறுத் தப்பட்டுள்ளது.
நான்கு மாகாணங்களில் சுமார் 420 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக போலந்து கல்வி அமைச்சர் பார்பரா நோவாக்கா தெரிவித்தார்.
போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் கூறுகையில், வெள்ளத்துக்கு பிறகு உதவ 100 அவசர கால பணியாளர்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களை அனுப்ப உக்ரைன் முன்வந்துள்ளது- என்றார்.