திருகோணமலை தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

2 months ago



திருகோணமலை தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தம்பலகாமத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் கடைபிடிக்கப்பட்டது..

இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு மலர்தூவி விளக்கேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

தம்பலகாமம் பிரதேசத்தின் பாரதிபுரம் கிராமத்தில் 01.02.1998 அன்று இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின்போது ஆறுமுகம் சேகர் (வயது 32), அமிர்தலிங்கம் சுரேந்திரன் (வயது 13), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (வயது 17), பொன்னம்பலம் கனகசபை (வயது 47), முருகேசு ஜனகன் (வயது 18), நாதன் பவளநாதன் (வயது 29), சுப்பிரமணியம் திவாகரன் (வயது 23), குணரத்தினம் சிவராஜன் (வயது 23) உள்ளிட்ட 8 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 

இந்த படுகொலைகள் தொடர்பாக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு முறையிடப்பட்டது.

அந்தவகையில் 13 காவல்துறையினருக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு 5 பேர் மீது 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

குற்றம் இடம்பெற்று 26 ஆண்டுகளின் பின்னர் 2024 ஏப்ரல் 26 அன்று இவ்வழக்குத் தொடர்பான தீர்ப்பு அநுராதபுரம் வடமத்திய மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி மனோஜ் தல் ஹொடபிட்டியவினால் வழங்கப்பட்டது. 

இந்தக் காலப் பகுதியில் கந்தளாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய அதிகாரி, பிரதிக் காவல்துறைப் பரிசோதகர் மேலும் 3 காவல்துறையினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 27வது ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

அண்மைய பதிவுகள்