'ரணில் கடவுள்' என பிரதிநிதிகள் சொல்லாத குறை

'ஜனாதிபதி ரணில் கடவுள்' என்று தமிழ் பிரதிநிதிகள் சொல்லாத குறை பாருங்கோ. அந்தளவுக்கு ஒரே பாராட்டு மழை. ஆகா ஓகோ என்று ஒரே புகழாரம்.

யாழ்ப்பாணத்துக்கு கிடைக்காத வரப்பிரசாதம் கிடைத்துவிட்டதாம்.

பாராட்டு மழையில் ஐனாதிபதி நனைந்தாரோ இல்லையோ பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நிராகரித்த உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அரசாங்கம் உருவாக்குவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மக்களின் ஆதரவு இல்லாமல் தெரிவான ஐனாதிபதி மக்கள் நிராகரித்ததை நிறைவேற்றுவேன் என்று சொல்லி இருப்பதில் இருந்து தெரிய வேண்டாமா, ஐனாதிபதிக்கு புகழாரம் செய்தவர்களுக்கு.

அரசு கொண்டு வரும் ஆணைக்குழு மீது தமிழ் மக்கள் நம்பிக்கையில்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

தமிழ் மக்களால் குற்றம் சாட்டப்பட்ட தரப்பினரை காப்பாற்றுவதற்காகவே ஆணைக்குழு செயற்படுவதாக சந்தேகம் தெரிவிப்பதனால் தான் தமிழ் மக்கள் அரசு கொண்டு வரும் ஆணைக்குழு மீது நம்பிக்கையில்லாமல் இருக்கின்றனர்.

அண்மையில் யாழ்.ஊடக அமையத்துக்கு வருகை தந்த பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வை கொடுப்பதற்கான ஆணைக்குழுவின் பிரதிநிதி ஒருவர் அரச பக்கம் குற்றமிழைத்தவர்களை கூண்டில் ஏற்றாமல் எப்படி இந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற முடியும் என்பதிலே குறியாக இருந்தார்.

அவருக்கு ஊடகவியலாளர்கள் தெளிவாக சொல்லி அனுப்பினர். அதாவது பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடயத்தில் அவர்களுக்கான தீர்வை வழங்குவதற்கான வேலையைச் செய்யுங்கள்.

அதைவிட்டு விட்டு குற்றமிழைத்த அரச தரப்பினரை காப்பாற்றும் நோக்கில் உங்கள் செயற்பாடுகளைச் செய்யாதீர்கள் என்ற கருத்தை தெளிவாக சொல்லி அனுப்பினர்.

தேர்தல் இலக்குடன் நடைபெறும் விடயங்களை சொல்லித் தெரிய வேண்டிய விடயம் அல்ல. மக்களுக்கு எல்லாம் தெரியும்.

ஐனாதிபதி யாழ்.வருகை தேர்தலுக்கானது. அவரை வரவேற்பவர்களும் அவருக்கு வேண்டியவர்கள்.

பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கிறார்களோ இல்லையோ, மேலும் மேலும் இந்த மக்கள் பாதிப்புறும் வேலையைச் செய்யாதீர்கள்.

2005 ஆம் ஆண்டு ஐனாதிபதியின் வருகைக்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்களாம் என்று தமிழ் பிரதிநிதி ஒருவர் ஜனாதிபதிக்கு தனது விசுவாசத்தை காட்டியுள்ளார்.

தென்னிலங்கை தரப்புகளாலை தமிழ் மக்களுக்கு என்றைக்குமே விமோசனம் கிடைக்கப் போவதில்லை என்பது காலம் காலமாக இடம்பெறும் விடயங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

ஐனாதிபதி கொடுக்கிற காசுக்கு வேலை செய்ய வேண்டும் என்றால் தமிழ் மக்களைப் பற்றியும் தமிழ் அரசியல்வாதிகள் திரும்பிப் பாருங்கள்.

ஊடகவியலாளர் கபிலநாத்தின் கட்டுரைகள் அடங்கிய யாத்திரை புத்தக வெளியீடு கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.

இந்த புத்தக வெளியீட்டில் ஒருவர் கவிதை என்று சொல்லிப் படித்தார். அந்தக் கவிதையைக் கேட்ட அரசியல்வாதிகளுக்கு ஏன்ரா இங்கே வந்தோம் என்றிருந்திருக்கும்.

அந்தளவுக்கு அந்த கவிதை கவிதையோ இல்லையோ கேட்கும் போது சாகனும் போல இருந்திருக்கும்.

நாட்டின் அபிவிருத்தி என்பது கண்டிப்பாக செய்ய வேண்டியது தான்.

தெற்கில் செய்யும் அபிவிருத்தியை விட வடக்கில் குறைவு. ஒரு கட்டடத்தை கட்டிவிட்டு சாதனை மாதிரி சொல்ல முடியாது.

ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தினம் என்று பார்த்தால் அவரை வரவேற்றவருக்கும் யாழ்.பல்கலைக்கழகம் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தியது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்றும் தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று கூடத் தெரியாமல் அன்றாடம் அழுது கொண்டே வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.

அரசியல் கைதிகள் விடுதலையின்றி சிறையில் வாடுகிறார்கள். காணிகள் அபகரிப்பு, தனியார் காணியில் விகாரை அமைப்பு என்று பிரச்சினை நீண்டு கொண்டே போகிறது.

தேர்தலுக்கான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுபவர்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் மீது மக்கள் விமர்சனம் வைப்பது என்பது தமிழர் அரசியல் பரப்பில் மிக மோசமான எதிர்வினைகளை ஆற்றும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அண்மைய பதிவுகள்