வடகீழ் பருவக்காற்று மூலமாக ஆண்டு சராசரியைவிட சற்று அதிக மழை கிடைக்கும். யாழ். பல்க லைக்கழக புவியியல்துறை தலைவர் கலாநிதி நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

3 months ago


வடகீழ் பருவக்காற்று மூலமாக ஆண்டு சராசரியைவிட சற்று அதிக மழை கிடைக்கும். அத்துடன், வங்காள விரிகுடாவில் 5 தாழமுக்க வலயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று யாழ். பல்க லைக்கழக புவியியல்துறை தலைவர் கலாநிதி நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இட்ட பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு.

2024ஆம் ஆண்டு வடகீழ் பருவக் காற்று மழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆண்டு சராசரியை விட சற்று கூடுதலாக அதாவது 550 மில்லிமீற்றரைவிட சற்று கூடுதலாக திரட்டிய மழையாக கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

அத்துடன், இந்த ஆண்டுக்கான பருவமழையின் முதலாவது உடைவு ஒக்ரோபர் நடுப்பகுதிக்குள் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படு கின்றது.

வழமைபோன்று இவ்வாண்டும் மூன்று தொடக்கம் 5 தாழமுக்க நிகழ்வுகள் வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்று அவற்றின் செல்வாக்கால் வடகீழ் பருவமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண்ணும், எல்நினோவின் தெற்கு வாசலாட்டமும் நடுநிலை மையில் இருப்பதனால் மிகப்பெரிய அளவில் மழை கிடைக்கும் என இவ் வாண்டு எதிர்பார்க்க முடியாது.

ஆனாலும், இவ்வாண்டும் முதல் குறிப்பிட்டது போன்று மூன்று தொடக்கம் ஐந்து தாழமுக்க நிகழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

முதலாவது தாழமுக்க நிகழ்வு ஒக்ரோபர் 20ஆம் திகதியில் இருந்து நவம்பர் 5ஆம் திகதிக்குள்ளும், இரண்டாவது தாழமுக்க நிகழ்வு நவம்பர் 15 ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதிக்கிடையிலும், மூன்றாவது தாழமுக்க நிகழ்வு நவம்பர் 28ஆம் திகதியிலிருந்து டிசெம்பர் 5ஆம் திகதிக்குள்ளேயும், நான்காவது தாழமுக்க நிகழ்வு டிசெம்பர் 10ஆம் திகதியிலிருந்து டிசெம்பர் 25ஆம் திகதிக்கிடையிலும், ஐந்தாவது தாழமுக்க நிகழ்வு டிசம்பரின் கடைசிப் பருதிக்கும் 2025 ஜனவரியின் முதல் வாரத்துக்கும் இடையில் நிகழ்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

குறிப்பாக, இந்த தாழமுக்க நிகழ்வு சந்தர்ப்பங்களில் சராசரியாக 24 மணித்தியாலத்துக்குள் 125 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

இவ்வாண்டு மூன்று தொடக்கம் 5 தாழமுக்க நிகழ்வுகள் இடம்பெற வாய்ப்பு இருந்தாலும் கூட வடக்கு மாகாணத்திற்கும் கிழக்கு மாகா ணத்திற்கும் மூன்று தாழமுக்க நிகழ்வுகளே பெரும் மழையை கொடுக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

புயலைப் பொறுத்தவரையில் இந்த 2024 ஆம் ஆண்டு வடகீழ் பருவக்காற்று காலப் பகுதியில் இரண்டு புயல்களுக்கான வாய்ப்புகள் காணப்பட்டாலும் கூட ஒரு புயலே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாண்டின் காற்று வீசல் பெரும் பாலான சந்தர்ப்பங்களிலும் மணிக்கு முப்பது முதல் ஐம்பது கிலோமீற்றர் வரை இருக்கும் என எதிர்வு கூறப்பட்டாலும் கூட தாழமுக்க காலங்களில் இந்த அளவு மாற்றம் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு பருவமழை கிட்டத்தட்ட சராசரியை விட 50 தொடக்கம் 100 மில்லிமீற்றர் அதிகமாக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டாலும் தாழ முக்க சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற மழை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மூன்று தடவைகளுக்கு மிகச் செறிவாக கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் அக்கால பகுதிகளில் வெள்ளப்பெருக்குகளுக்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, இவ்வாண்டு பருவமழையை பொறுத்த வரையில் தாழமுக்ககத்தோடு கூடிய செறிவான மழை கிடைக்கும் என்பதோடு காற்று வீசலும் சற்று அதிகமாக அதாவது 30 முதல் 50 கிலோமீற்றர் என்ற சராசரிகளில் வீசும் என எதிர்பார்க் கப்படுவதனால் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த மாதம் இறுதிப் பகுதியில் அல்லது அடுத்த மாதத்தில் முதல் வாரத்தில் மேற்கொள்வதன் ஊடாக இந்த ஆண்டின் வடகீழ் பருவக் காற்று காலப் பகுதியில் நமக்கு ஏற்படு கின்ற பாதிப்புகளை இயலுமான அளவில் குறைக்க முடியும்.

அந்த அடிப்படையில் நமது வாழி டங்கள் மற்றும் வேலையிடங்களுக்கு அண்மித்த இயற்கையான மற்றும் செயற்கையான வடிகால் அமைப்புகள் துப்புரவாக்கப்பட்டு இலகுவாக மழை நீர் வடிந்து ஓடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

எங்களுடைய வாழ்விடங்கள் அல்லது வேலை இடங்களுக்கு அண்மித்து காணப்படும் கடும் காற்றினால் பாதிக்கப்படக்கூடிய மரங்களின் கிளைகளை கத்தரித்து அல்லது அவற்றின் விதானங்களின் அளவை குறைப்பதன் ஊடாக கடும் வேகமான காற்றினால் மரங்கள் முறிந்தோ அல்லது வேருடன் பாறியோ வீழ்வது தடுக்க முடியும்.

எங்களுடைய பிரதேசத்தில் இயற்கையான அல்லது செயற்கையான நிகழ்வுகளினால் உருவாக்கப்பட்டிருக்கின்ற குழிகள் அல்லது பள்ளங்களை பருவ மழைக்கு முன்பதாக மூடுகின்ற அதேசமயம் ஆபத்தான இடங்களை அடையாளப்படுத்தி அது எல்லோரின் பார்வைக்கும் உட்படக் கூடிய வகையில் தெளிவான குறியீடுகளை வைப்பது கடும் மழை காலத்தில் ஏற்பட்டக்கூடிய பாதிப்புகளை குறைக்க முடியும்.

விவசாயிகளைப் பொறுத்த வரையில் ஒக்ரோபர் மாதத்தின் ஆரம்ப பகுதியிலிருந்து அல்லது நடுப் பகுதியில் இருந்து நிலத்தை பண்படுத்துகின்ற அதே சமயத்தில் உரியகாலப் பகுதிகளில் விதைப்பை மேற்கொள்ளுவதன் மூலம் இயலுமான அளவில், நீர்ப்பாசனத்தை நம்பி இருக்காது மானாவாரியாக கிடைக்கின்ற மழையிலேயே விவசாய நடவடிக் கைகளை மேற்கொள்ள முடியும்.

அத்தோடு இவ்வாண்டு சராசரிக்கு அண்மித்ததாகவே மழை கிடைக்கும் என்பதனால் நீண்ட காலத்தில் விளைச்சல் தரக்கூடிய நெல்லினங்களை தவிர்த்து மூன்று அல்லது மூன்றரை மாதங்களில் பயன்தரக்கூடிய விதையினங்களை அண்மித்த காலப் பகுதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடி மின்னல் நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் மழையோடு கூடிய இடி மின்னல் நிகழ்வு தொடர்பிலும் அவதானமாக இருப்பது அவசியமாகும். குறிப்பாக வன்னிப் பெருநிலப்பரப்பில் மழை கிடைக்கும்போது நிலத்தைப் பண்படுத்தும் விவசாயிகள் அவதானமாக இருப்பது அவசியம்.

இடி மின்னலுடன் மழை கிடைக்கும் போது எக்காரணம் கொண்டும் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும். இது ஒரு நீண்டகால வானிலை முன்னறிவித்தல் என்பதனால் மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு - என்றும் அவர் கூறியுள்ளார்.