சாவகச்சேரி வைத்தியசாலையின் ஊழலை வெளிப்படுத்திய மருத்துவரை வெளியேற்றினர்.

5 months ago


இப்படியெல்லோ மருத்துவர் வரவேண்டும். நாங்கள் எதிர்பார்த்த மருத்துவர் வந்துவிட்டார். இனி பெரியாஸ்பத்திரிக்கு போகத் தேவையில்லை என்று எண்ணினோம் எல்லாம் கனவாகிப் போய்விட்டதே.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல் கொண்டுவந்து காட்டிவிட்டு கொண்டுபோய்விட்டார்கள். மனசில்லை கடவுளுக்கு 

என்று சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்னே கூடிய மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

நான் வேலை செய்யவில்லை நீ வந்து வேலை செய்தால் விடமாட்டேன் என்ற கதையாக எல்லோ இருக்கிறது. வேலை செய்யாமல் இருந்து கொண்டு வேலை செய்ய முன்வருகின்றவரை குழிபறிக்கின்ற வேலையை மட்டும் சரியாகச் செய்யும் அதிகாரிமாரை எப்படிச் சொல்ல.

வடக்கில வேலை செய்வதற்கு முன்னிற்கின்ற அரச அலுவலகர்களை இடமாற்றுவது தான் வேதனையான விடயம். மக்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், அவர்கள் படும் கஷ்ரங்களை உணர்வீர்களா?

தான் பொறுப்பெடுத்த இடத்தில் உள்ள நிர்வாக குறைகளை வெளிப்படையாகச் சொல்கின்றார் என்றால் அவரிடம் பொறுப்பு இருக்கிறது என்பது சாதாரண குடிமகனுக்கும் புரியும். பொறுப்பில்லாதவர்களிடம் ஒரு பொறுப்பானவர் நிற்பதும் சிரமம் தான். 

சாவகச்சேரி ஆதார மருத்துவமனை பல பிரச்சினைக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் அந்த மருத்துவமனையை சீர்படுத்தவுள்ளேன் என்று ஒரு மருத்துவர் முயற்சி செய்தும் முடியாமல் போனது சமூகத்துக்கு பின்னடைவு தான்.

சமூக வலைத்தளத்தில் சாவகச்சேரி ஆதார மருத்துவமனை எதிர் கொண்டுள்ள பிரச்சினை தொடர்பிலும், அங்கே வேலை செய்கின்றவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது தொடர்பிலும் வெளிப்படுத்தியதால்

மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பலருக்கு பிரச்சினை தான்.

வைத்தியசாலையில் உள்ள பிரச்சினையை விட மருத்துவரை வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு தான் மேலிடத்தில் இருந்து கீழ் இடம் உள்ளவர்களிடம் தோன்றியுள்ளது. என்பது வெளிப்படுத்தி நிற்கிறது. 

மருத்துவரை வெளியேற்ற முதல் வைத்தியசாலை தொடர்பில் அவர் சொன்ன கருத்துகள் தொடர்பில் அக்கறை எடுக்க வைத்தியசாலை வட்டாரத்தில் எவரும் இல்லை.

சாவகச்சேரியில் இரவு என்று கூடப் பார்க்காமல் ஒன்று கூடிய மக்களுக்கு இருக்கும் அக்கறை அந்த வைத்தியசாலை வட்டாரத்துக்கு தோன்றவில்லை என்பது தான் கவலை தரும் விடயமாகும்.

படித்து அதிகாரியாக வந்தால் ஊருக்கு நல்லது அதாவது ஊர் வளர்ச்சி பெறும் என்று சொல்வார்கள். ஆனால் இன்று அப்படித் தெரியவில்லை. தான் இருக்கிற இடத்தில நல்லாய் தான் வாழவேண்டும் என்று நினைக்கிறவர். அந்தத் துறையும் சிறப்பாக இயங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் இவ்வளவுக்கு இந்தப் பிரச்சினை பெரிசாக வந்திருக்காது.

முதலில் எல்லோரும் உத்தமர் என்றால் அந்த வைத்தியசாலை தொடர்பில் அந்த மருத்துவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்துக்கு பதில் சொல்ல வேண்டும். அப்பொழுது தான் அந்த வைத்தியசாலை குறைகள் நிவர்த்தி செய்யப்படும். சொல்வார்களா? 

10 நாள் வேலை செய்வதாகவும் முழுநாளும் வேலை செய்ததாக சம்பளம் எடுப்பது மட்டுமல்ல மேலதிகவேலை கொடுப்பனவையும் பெறுகிறார்களாம். மருத்துவர் பொய்யா சொல்கிறார். 

வைத்தியசாலை நலன்புரிச் சங்கம் இந்த மருத்துவர் மீது குற்றச்சாட்டை அடுக்குகிறது, மருத்துவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்துக்கு பதில் சொல்லவும். ஆதாரமான பதிலில் தான் இந்த வைத்தியசாலையை சீர்படுத்த முடியும்.

போராட்டத்தில் குதித்த மக்கள் கேட்கிறார்கள். அவர்களுக்குத் தானே இந்த வைத்தியசாலை இருக்கிறது. பொறுப்பு வாய்ந்தவர்கள் பதில் சொல்லவும்.


அண்மைய பதிவுகள்