யாழ்.சுன்னாகம் பொலிஸாரால் குடும்பஸ்தர் சித்திரவதை!விசாரணைகளை ஆரம்பித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு.

4 months ago


யாழ்.சுன்னாகம் பொலிஸாரால் குடும்பஸ்தர் சித்திரவதை!விசாரணைகளை ஆரம்பித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் குடும்பஸ்தரை எவ்வித காரணமும் கூறாது கைது செய்துள்ளதாகவும், கைது செய்த பின்னர் அவரை சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

கடந்த 28ஆம் திகதி நள்ளிரவு வேளை எமது வீட்டின் மதில் ஏறி பாய்ந்து, வீட்டின் முன்பக்க கதவைக் கால்களால் உதைத்து உடைத்து வீட்டினுள் அத்து மீறி நுழைந்த சுன்னாகம் பொலிஸார் எனது கணவரை தாக்கிக் கைது செய்தனர்.

கணவரை எதற்காக கைது செய்கிறீர்கள் என கேட்டவேளை, அதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. கணவரின் கைதை தடுக்க நிறைமாதக் கர்ப் பிணியான நானும். கணவரின் அண்ணாவின் பெண் பிள்ளைக ளும் முயன்றவேளை எம்மையும் தாக்க முற்பட்டனர்.

கணவரின் அண்ணாவின் மகள் கைத்தொலைபேசியை கையில் வைத்திருந்தவேளை, வீடியோ எடுக்கிறீயா என அதைப் பறித்து உடைக்க முயன்றனர்.

நாம் கணவரை பொலிஸார் காரணமின்றி கைது செய்து அழைத்துச் செல்வதனை தடுக்க முயன்ற போதிலும் எம்மை தாக் குவது போன்று அச்சுறுத்தி கணவனை வீட்டில் இருந்து இழுத்துச் சென்று வெளியில் நின்ற முச்சக்கர வண்டியில் ஏற்றி சென்றனர்.

கணவனை அழைத்து செல்லும் போதே கண்களை கட்டியுள்ளனர். பின்னர் யாருடனோ தொலைபேசியில் பேசிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர், கண வனின் பெயரைக் கூறி, அவரை கைது செய்துவிட்டோம் எனக் கூறியுள்ளார்.

நாம் நள்ளிரவே சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்ற போது, கணவனை அடித்து துன்புறுத்தி இருந்தனர். அது தொடர்பில் கேட்டபோது, சந்தேகத்தில் கைது செய்துள்ளோம் எனக் கூறி எம்மை அங்கிருந்து அனுப்பிவிட்டனர்.

மறுநாள் 29ஆம் திகதி நாம் யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகம் சென்று முறையிட்டோம். அவர் அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் தொலைபேசியில் விசாரித்தார். அவர்கள் ஏதோ கூற எம்மை அனுப்பி வைத்தார்.

நாங்கள் மீண்டும் சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்ற வேளை, கணவரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி. தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரான உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்டோர் பைப், வயர்களால் மிக மோசமாக தாக்கி சித்திரவதை புரிந்துள்ளனர்.

கணவனை நிலத்தில் முழங்காலில் இருந்தி தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர் சத்தி எடுத்துள்ளார்.

கணவரை கைது செய்த பொலிஸார் 24 மணி நேரம் கடந்தும் நீதிமன்றில் முற்படுத் தாது, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மிகமோசமான முறையில் சித் திரவதைக்கு உள்ளாகியுள்ளனர்.

பின்னர் அவரை விடுவித்துள்ள நிலையில் நாம் அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தி யசாலையில் அனுமதித்துள்ளோம். தற்போது எனது கணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்-என்றார்.

அதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது எனவும், பாதிக் கப்பட்ட நபரை திங்கட்கிழமை தெல்லிப்பளை ஆதார வைத்தி யசாலையில் நேரில் பார்வையிட்டு, அவரது வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாகவும், அதன் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப் பாளர் த. கனகராஜ் தெரிவித்தார். 



அண்மைய பதிவுகள்