தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தீர்ப்புக்கு எதிராக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

4 months ago



தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிரதிவாதியினால் இந்த ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட 2023/17ஆம் இலக்க மேன் முறையீட்டை விசாரணை செய்து தள்ளுபடி செய்யுமாறு கோரியே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மேன்முறையீட்டு பிரதிவாதியினால் கோரப்பட்ட தகவலை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 5(1)(ஆ)(i)ஆவது பிரிவின் கீழ் வழங்க முடியாதென கடற்படைத் தகவல் அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை உறுதிப்படுத்துமாறும் குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இம்மனுவின் மேன்முறையீட்டு பிரதி வாதியாக ஊடகவியலாளர் றிப்தி அலியும் இணைக்கப்பட்ட பிரதிவாதிகளாக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு கடந்த 2023.10.02ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், இதன் பிரதி மேன் முறையீட்டுப் பிரதிவாதிக்கு

கடந்த ஜூலை 15ஆம் திகதியே மேன்முறையீட்டு நீதிமன்றப் பதிவாளரினால் அனுப்பிவைக் கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டை விட்டுத் தப்பியோடுவதற்கு முன்னர் கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் சில நாட்கள் தங்கியிருந்தார். இது தொடர்பான விடயங்களைக் கோரியே ஊடகவியலாளர் றிப்தி அலியினால் கடந்த 2022.09.01ஆம் திகதி கடற்படையிடம் தகவல் கோரிக்கை யொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்கத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 5(1)(ஆ)(1)ஆவது பிரிவின் கீழ் குறித்த தகவல் கோரிக்கை கடற்படையின் தகவல் அதிகாரி யினால் நிராகரிக்கப்பட்டது.

இதற்கு எதிரான கடற்படையின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடம் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டுக்கு எந்தவித பதிலும் கிடைக்காமையால் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்யப்பட்டது.

ஆணைக்குழுவின் நீண்ட விசாரணையின் போது கடற்படையால் எழுத்து மூலமும் வாய்மொழி மூலமும் மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டன.

எவ்வாறாயினும், தகவல் கோரிக்கையாளரின் எட்டு கோரிக்கைகளில் முன்னாள் ஜனாதிபதியின் பயணத்துக்காக கடற்படைக்கு எவ்வளவு செலவு ஏற்பட்டது. அதற்கான கட்டணத்தைச் செலுத்தியவர் யார். மற்றும் எப் போது செலுத்தினார் என்ற கோரிக் கைகளுக்கு மாத்திரம் பதிலளிக்குமாறு ஆணைக்குழு உத்தரவிட்டது.

அரசின் பாதுகாப்பை அல்லது அதன் ஆட்புல இறைமையை அல்லது பந்தோபஸ்தைப் பாதிக்கக்கூடும் என்ற எல்லைக்குள் குறித்த இரண்டு கோரிக்கைகளும் உள்ளடங்காதெனவும் ஆணைக் குழுவின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் இத்தீர்ப்புக்கு எதிராகவே கடற்படையின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரி என்ற வகையில் அதன் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது.