வடக்கு - கிழக்கைப் பிரித்த கடந்த காலத்தைப்பேசி பயனும் இல்லை - ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்
வடக்கு - கிழக்கைப் பிரித்தது ஜே.வி.பி. என்ற கடந்த காலத்தைப் பேசி எந்தப் பயனும் இல்லை. ஆதலால், எதிர்காலம் தொடர்பில் தற்போது சிந்திப்போம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜே.வி.பி.யினருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பொன்று தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போதே, அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார் .
சந்திப்புத் தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-
தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளோம். 2019 ஆம் ஆண்டு ஜே.வி.பி. முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் போது வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பிலும், புதிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பிலும் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்.
13 ஆவது திருத்தம் என்பது அமுலில் இருக்கின்ற ஒன்று. அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதேபோல மாகாணசபை முறைமை என்பது தமிழ் மக்களினுடைய பிரச்சினைக்கான தீர்வா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆகவே இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு புதியதொரு அணுகுமுறையை முன்னெடுக்க வேண்டும்.
பிற கட்சிகள் வடக்கிற்கு வருகின்றார்கள் பேசுகின்றார்கள். பலதைச் சொல்லுகின்றார்கள். ஆனால் அவர்கள் இதற்கு முன்பு ஆட்சிப்பீடத்தில் இருந்தவர்கள்.
நாங்கள் சொல்வதைச் செய்பவர்கள். இனப்பிரச்சினைக்குத் தீர்வாக பேச்சுகள் மூலம் புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
இதேவேளை கடந்த காலத்தைப் பேசிக் கொண்டிருந்தால் எதிர்காலத்துக்குரிய இலக்கை அடைந்துகொள்ள முடியாது என்று மேலும் தெரிவித்துள்ளார்.