பல்லினத் தன்மையைக் கட்டியெழுப்புவதில் கனடா சிறந்ததொரு முன்மாதிரியாகத் திகழ்வதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

2 months ago



கனடாவில் பிரகடனப் படுத்தப்பட்டிருக்கும் தமிழர் மரபுரிமை மாதத்தின் சிறப்பு குறித்து சுட்டிக்காட்டியிருக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உலகளாவிய ரீதியில் சகலரையும் உள்ளடக்கிய பல்லினத் தன்மையைக் கட்டியெழுப்புவதில் கனடா சிறந்ததொரு முன்மாதிரியாகத் திகழ்வதாகத் தெரிவித்தார்.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு டொரன்டோவில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் புலம்பெயர் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூஜை வழிபாடுகள் மற்றும் தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தமது அழைப்பை ஏற்று தைப்பொங்கல் தினத்தன்று வருகை தந்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி தெரிவித்த முடிக்குரிய பூர்வீகக்குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவுக்கும், ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஆற்றிய பணிகளுக்கும் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

அதேவேளை தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் சகலருக்கும் வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தமிழ் மரபுரிமை மாதத்தின் சிறப்பு மற்றும் அவசியம் குறித்து சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் சகலரையும் உள்ளடக்கிய பல்லினத் தன்மையைக் கட்டியெழுப்புவதில் கனடா சிறந்ததொரு முன்மாதிரியாகத் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு கனடாவில் அனைத்தும் சீராக இருக்கிறது என்று கூறமுடியாது எனத் தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ, இருப்பினும் அனைத்தும் சிறந்த முறையில் நிர்வகிப்பதையும் கட்டியெழுப்புவதையும் முன்னிறுத்தித் தாம் தொடர்ந்து செயலாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்