சமஷ்டி அரசியல் தீர்வு குறித்து புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போதே கவனத்தில் கொள்ள முடியும்.-- ஜனாதிபதி குறிப்பிட்டார் என்று எம்.பி சி.சிறீதரன் தெரிவிப்பு
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்து புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போதே கவனத்தில் கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்டகாலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம் கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாணக்கியன் இராசமாணிக்கம், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகநாதன் குகதாசன், ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி சிறிநாத், துரைராசா ரவிகரன் ஆகியோர் இதன்போது கலந்து கொண்டனர்.
இது குறித்து சிறீதரன் எம்.பி தெரிவிக்கையில்-
இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினோம். சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போதே கவனத்தில் கொள்ள முடியும் என அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருட இறுதிக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எம்மிடம் உறுதியளித்தார்.
13ஆவது திருத்தம் தொடர்பில் அவர் எம்மிடம் எதுவும் கூறவில்லை. உள்ளுாராட்சித் தேர்தலை நீதிமன்ற உத்தரவின் படி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் தம்மால் உடனடியாக எதுவும் செய்ய இயலாது என்றும் படிப்படியாக அந்த விடயத்துக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தொல்பொருள் திணைக்களம், வனவள திணைக்களம் என்பவற்றின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்து பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காணிகள் விடுவிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார் - என்றார்.