பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்ட பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் மொத்தமாக 226,343 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
வட, கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களில் யாழில் இரண்டாம் இடம் ஏனைய மாவட்டங்களில் மூன்றாம், நான்காம் இடங்கள் ஒப்பீட்டளவில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் குறைந்தளவு வாக்குகள் நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுக் கட்டமைப்பினரால் வட, கிழக்கு தமிழ் மக்களின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்ட பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் மொத்தமாக 226,343 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இது செல்லுபடியான வாக்குகளில் 1.70 சதவீதமாகும்.
மிகக் காத்திரமானதாகக் கருதப்பட்ட இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறித்த சில தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கியிருந்தன.
தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் அதேவேளை, தமிழர்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என்பதை சர்வதேச சமூகத்துக்குக் கூறும் நோக்கில் களமிறக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இப் பொது வேட்பாளர் வட, கிழக்கு மாகாணங்களில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல், அதாவது சுமார் 700,000 வாக்குகளைப் பெறவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இருப்பினும் போட்டித்தன்மை மிக அதிகமான இத் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் மொத்தமாக 226,343 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
அதன்படி அவர் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 116,688 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 36,377 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்.
அவரால் பெறப்பட்ட இவ்வாக்குகள் செல்லுபடியான வாக்குகளில் முறையே 31.39, 16.74 சதவீதம் ஆகும்.
அதேபோன்று அரியநேத்திரன் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 18,524 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 36,905 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலும், திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் 9.985 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலும் இருக்கிறார்.
அவரால் பெறப்பட்ட இவ்வாக்குகள் செல்லுபடியான வாக்குகளில் முறையே 7.74, 11.58, 2.36 சதவீதம் ஆகும்.
மேலும் அரியநேத்திரன் வட, கிழக்கு மாகாணங்களில் தொகுதி வாரியாகப் பெற்ற வாக்குகளை நோக்கு கையில் வடக்கில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வட்டுக்கோட்டையில் 11,170 வாக்குகளையும், காங்கேசன்துறையில் 5,726 வாக்குகளையும், மானிப்பாயில் 11,587 வாக்குகளையும், கோப்பாயில் 11,410 வாக்குகளையும், உடுப்பிட்டியில் 8,467 வாக்குகளையும், பருத்தித்துறையில் 8,658 வாக்குகளையும், சாவகச்சேரியில் 9,159 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்.
அடுத்ததாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னாரில் 10,757 வாக்குகளையும், வவுனியாவில் 11,650 வாக்குகளையும், முல்லைத்தீவில் 12,810 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் சேருவிலில் 2,412 வாக்குகளையும், திருகோணமலையில் 11,300 வாக்குகளையும், மூதூரில் 4,381 வாக்குகளையும் பெற்றிருக்கும் அரியநேத்திரன், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டததில் கல்குடாவில் 10,890 வாக்குகளையும், மட்டக்களப்பில் 12,758 வாக்குகளையும், பட்டிருப்பில் 12,356 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்.
மேலும் திகாமடுல்லை தேர்தல் மாவட்டததில் அம்பாறையில் 28 வாக்குகளையும், சம்மாந்துறையில் 2,299 வாக்குகளையும், கல்முனையில் 2,623 வாக்குகளையும், பொத்துவிலில் 4,802 வாக்குகளையும் அரியநேத்திரன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.