இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இன்று இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது கடும் நெரிசல் ஏற்பட்டது.
ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றபோது பலர் கீழே விழுந்தனர்.
நெரிசலில் சிக்கி 23 பெண்கள், 3 குழந்தைகள், ஒரு ஆண் என 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர்.
இதனால் இன்று மாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த துயர சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.