யாழ்.சண்டிலிப்பாயில் மனைவியின் காதை வெட்டியவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவு

3 months ago



யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டியவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டது.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் சித்திரவதை தாங்காது சண்டிலிப்பாயில் உள்ள உறவினரின் வீட்டில் வசித்து வருகின்றார்.

இந் நிலையில் அங்கு சென்ற கணவன் கடந்த 07 ஆம் திகதி மனைவியின் காதை வெட்டிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர் இச்சம்பவம் குறித்து கடந்த 10 ஆம் திகதி மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த சந்தேகநபருக்கு எதிராக வேறு சில முறைப்பாடுகள் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்திலும் காணப்படுகின்றன.

இந் நிலையில் குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் மனைவியின் தலை மற்றும் காலை உடைத்து, பல்வேறு சித்திரவதைகளை புரிந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.