புதிய அரசு இடம்பெறும் என்று குறிப்பிட்ட எந்த விடயத்தையும் முன்னெடுக்கவில்லை.-- எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவிப்பு

2 weeks ago



புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம்பெறும் என்று குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா செயல்பட்டு வருகின்ற போதிலும் அரசாங்கம் அதில் பெருமளவு கரிசனை காட்டவில்லை என்றும் சிவாஜிலிங்கம் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி இந்தியா சென்று இந்தியப் பிரதமருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அனைத்து தமிழ் தரப்பினுடைய கோரிக்கையாக இருந்து வருவது சமஷ்டி கோரிக்கையாகும்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைமை அரசமைப்பில் இருந்தும் கூட அவை அமுல்படுத்தப்படவில்லை.

தற்போது இந்தியாவை சந்தித்த ஜனாதிபதி கூட அரசியல் உரிமை தொடரில் எந்த விதமான திட்டவட்டமான உறுதிமொழிகளையும் வழங்கவில்லை.

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.

புதிய அரசமைப்பு கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அரசமைப்பு என்பது பழைய மொந்தையிலேயே புதிய கள்ளு போன்று இருக்குமே தவிர எந்தவித தீர்வும் கொண்டதாக இருக்கப் போவதில்லை.

மிகப்பெரும் வெற்றி பெற்றும் கூட அவர்களது சிந்தனையில் பாரிய மாற்றம் இல்லை.

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமை வலுப்படுத்த வேண்டும்.

பல உயிர்த் தியாகங்களை செய்த பின்பும் நாம் பிரிந்து செயல்பட முடியாது.

எனவே, அனைவரையும் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுவதாகவும் கூறினார்.



அண்மைய பதிவுகள்