மாணவர்களின் கல்வியில் நிதி மோசடி செய்யும் வடமாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரேஸ், பல மில்லியன் ரூபாய் அபேஸ், கணக்காய்வில் அம்பலம்.
வடமாகாணத்தின் 2022 ஆம் ஆண்டு மூன்றாம் தவணை பரீட்சைகளுக்காக உத்தேசிக்கப்பட்ட ரூ.18,950,100 பார்க்கக் கூடிய தொகை மாகாண கல்வி திணைக்களத்தால் திரட்டப்பட்டு ரூ. 13,926,892 பரீட்சைகளுக்காக செலவழிக்கப்பட்ட நிலையில் ரூ.2,099,503 மாத்திரமே மிகுதியாக காணப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட இந்த பரீட்சையில், மாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் தாண்டி இவ்வளவு தொகை உத்தேசிக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாகவும் திரட்டி அதனை உள்ளூராட்சிக்கு வருமானமாக கொடுப்பது மாத்திரம் அல்லாமல் ஊர்ஜிதப்படுத்தப்படாத மோசடியான செலவினங்களும் செய்து ஏழை மாணவர்களின் ஏழை குடும்பங்களினதும் வயிற்றில் அடிக்கும் செயற்பாட்டை வடமாகாண கல்வி திணைக்களம் செய்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
இவ்வாறான செயற்பாடு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் இலவசக் கல்விக் கொள்கைக்கு முரணான ஒன்றும் ஆகும்.
பரீட்சை தொடர்பான பெறுகைக்குழுவின் உத்தேசித்த தொகைக்கு மேலதிகமாக திரட்டியதானது ஊழலுக்கா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இதற்கு மேலதிகமாக தகவல் அறியும் சட்ட மூலம் ஒன்றில் ஒரு பாடத்திற்கான பரீட்சை கட்டணம் எவ்வளவு என்ற வினாவிற்கு பாடத்திற்கு கட்டணம் தீர்மானிக்கப்படுவதில்லை எனவும் மாணவர்களுக்கே தீர்மானிக்கப்படுவது எனவும் மாகாணக் கல்வித் திணைக்களம் பதில் தந்ததானது, குத்துமதிப்பான ஒரு தொகையை மாணவர்களிடமிருந்து இவர்கள் அறவிட்டுக் கொள்வதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.
மேலும் 2024 ஜனவரியில் நடந்த தரம் 10, 2023 இறுதித் தவணை பரீட்சையின் தமிழ் இலக்கிய இரண்டாம் பகுதி வினாத்தாள் பாடசாலைகளுக்கு அச்சிட்டு அனுப்பப்படாத நிலையில் அதனை பாடசாலைகளே அச்சிட்டு வழங்கியது. இதற்கும் சேர்த்தே கட்டணம் மாகாண கல்வித் திணைக்களத்தால் அறவிடப்பட்டிருந்தது.