வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுடன் வடக்கு மாகாண அரச கால் நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடினர்.
வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுடன் வடக்கு மாகாண அரச கால் நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் எம். முரளிதாஸ், செயலாளர் எஸ். சுகிர்தன், உபதலைவர் எஸ். கிருபானந்தகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கால்நடை பண்ணையாளர்களுக்கு உச்சபட்ச சேவை வழங்குவதற்கு தடையாகவுள்ள பல இடர்பாடுகள் தொடர்பில் குறித்த சங்கத்தினர் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினர்.
முக்கியமாக விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான மருந்துகள் இன்மையும் அது தொடர்பான பொருத்தமான பொறி முறை இன்மை தொடர்பாகவும் வாகனப் பற்றாக்குறை மற்றும் சாரதிகள் இன்மை தொடர்பாகவும் கால்நடை வைத்தியர்களின் இடமாற்ற சபையில் சங்கத்தின் உறுதியான பிரசன்னத்தின் அவசியம் மற்றும் கால்நடைகளுக்கு வழங்கும் தீவனங்களின் தரத்தின் உறுதிப்பாடு தொடர்பாகவும் ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும் கால்நடை வைத்தியர்களும் மாகாணம் முழுதும் நடைமுறைப்படுத்தும் சேவைகள் தொடர்பாகவும் சட்டவிரோத சிகிச்சையாளர்களால் பண்ணையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கால்நடை வைத்தியர்களின் பற்றாக்குறை, ஏனைய ஊழியர்களின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் பண்ணையாளர்களின் அத்தியாவசிய தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது.
இவைகள் தொடர்பில் சாதகமாக பதிலளித்த ஆளுநர் வேதநாயகன், உடனடியாக செய்யக் கூடியவற்றை செய்வதாகவும் ஏனையவற்றை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தீர்க்க முனைவதாகவும் உறுதியளித்துள்ளார்.