முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழி இறுதி அறிக்கை நேற்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழி இறுதி அறிக்கை நேற்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், 1994 - 1996 ஆண்டு காலப்பகுதிக்குள் இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி. கே.நிரஞ்சன் தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு நேற்று வியாழக் கிழமை நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டது. விசாரணைகளின் பின்னர் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தவை வருமாறு,
"நேற்றைய வழக்கு விசாரணையின் போது ராஜ்சோமதேவாவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் 1994 ஆம் ஆண்டுக்கும் 1996ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இடைப்பட்டதாக இருக்கும் என்று அவருடைய இறுதி அறிக்கை இருந்ததாக நீதிமன்றில் கூறப்பட்டிருந்தது.
"அத்துடன், சட்ட மருத்துவ அதிகாரியால் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் இலக்க தகடு இலக்கங்களும், ஆடைகளில் இருந்து எடுக்கப்பட்ட இலக்கங்களும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அந்த இலக்கங்களை பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும், அதனை உரிய முறையில் அறிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது.
இதன்படி, அதுபற்றி அறிவுள்ளவர்கள் நீதிமன்ற பதிவாளருக்கு அது சம்பந்தமாக தெரிவிக்கவேண்டிய தேவை இருக்கின்றது.
“இந்த ஒட்டு மொத்த அறிக்கைகளும் டிசெரம்பர் 12 ஆம் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளன.
வரவேண்டிய மீதி அறிக்கைகளையும் நீதிமன்றம் நினைவூட்டலை அனுப்பி அறிக்கைகளை பெற்றுக்கொள்ள இருக்கிறது.
இந்த வழக்கு மீண்டும் டிசெம்பர் 12 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளது” என்றார்.