400 பொலிஸ் நிலையங்கள் பங்களாதேஷில் நிர்மூலம்! 50 பொலிஸார் உட்பட 300 பேர் உயிரிழப்பு, இராணுவ ஜெனரல் பதவி நீக்கம், கைது.
பங்களாதேஷில் 400 பொலிஸ் நிலையங்களை அடித்து நொறுக்கி நிர்மூலமாக்கிய போராட்டக்காரர்கள் அங்கிருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்களை சூறையாடினர். அத்தோடு, 50 பொலிஸார் உட்பட 300 பேர் கொல்லப்பட்டனர். இதேவேளை, இராணுவ ஜெனரல் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்த நிலையில், அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் வன்முறையாக வெடித்தது. அரசை எதிர்த்து மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கடந்த ஜூலை மாதம் மட்டும் 300 பேர் பலியாகினர். இந்த நிலையில், இம்மாதம் 5ஆம் திகதி போராட்டம் தீவிர மடைந்ததில், ஹசீனா பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த வன்முறையை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார்.
இதன்பின்பும், அந்த நாட்டில் நடந்த வன்முறையில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர். இந்தச் சூழலில், கடந்த 2 நாட்களில் 400 பொலிஸ் நிலையங்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர். 50 பொலிஸார் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், பங்களாதேஷ் இராணுவத்தின் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மாற்றப்பட்டனர். இதில், மேஜர் ஜெனரல் ஜியாவுல்லும் அடங்குவார். அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவர் இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றார். இதற்காக, டாக்கா விமான நிலையத்துக்கு நேற்றிரவு சென்ற அவர், எமிரேட்ஸ் 585 என்ற விமானத்தில் புறப்பட தயாரானார்.
ஆனால், விமான ஓடுபாதையில் சென்ற விமானம் மீண்டும் விமான நிலையத்துக்கு திருப்பிக் கொண்டு வரப்பட்டது. நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார்.