ஜனநாயக செயன்முறையில் அரசாங்கத்தின் கடப்பாடு மீதான நம்பிக்கை பொருளாதார மீட்சிக்கு முக்கியமானது!
ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் தொடர்பில் தீர்மானம் ஒன்றை அறிவிக்கும்வரை ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்கக் கோரும் அடிப்படை உரிமை மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருக்கிறது. சாத்தியமானளவு விரைவாக அதை பரிசீலனைக்கு எடுப்பதற்கு உயர்நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை தேசிய சமாதானப் பேரவை வரவேற்கிறது.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதைப் பற்றி தொடருகின்ற நிச்சயமற்றநிலை சகல விதத்திலும் நாட்டுக்கு மிகவும் பாதகமானது.அது சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்களை கிரமமாக நடத்துவது தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கும் ஜனநாயகச் செயன்முறையில் உள்ள நம்பிக்கையை மலினப்படுத்தும்.
ஆட்சிமுறையின் இரு அடுக்குகளான உள்ளூராட்சி சபைகளுக்கும் மாகாண சபைகளுக் குமான தேர்தல்கள் நடத்தப்படாமல் இருப்பது இலங்கையில் துரதிர்ஷ்டவசமான யதார்த்தமாகும். உள்ளூராட்சி தேர்தல்கள் ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாகவும் மாகாணசபை தேர்தல்கள் ஐந்து வருடங்களுக்கும் அதிகமான காலமாகவும் நடத்தப்படாமல் இருக்கின்றன.
அடுத்த வருடம் வரை பாராளுமன்ற தேர்தலை நடத்தவேண்டிய சட்டரீதியான தேவை இல்லை என்ற போதிலும், இரு வருடங்களுக்கு முன்னர் அந்த தேர்தல் நடத்தப்பட்டு மக்களிடம் இருந்து புதிய ஆணை பெறப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம். ஏனென்றால் மக்கள் போராட்டத்தை அடுத்து ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டதால் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் மக்கள் வழங்கிய ஆணை மீளப்பெறப்பட்டு விட்டது என்பதே அர்த்தமாகும்.
உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் கூறியிருக்கிறார் என்பதை தேசிய சமாதான பேரவை கவனத்தில் எடுக்கிறது. அரசியலயைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தேர்தல்கள் ஆணைக்குழுவும் வலியுறுத்தியிருக்கிறது.
எந்த காரணத்துக்காக இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலை தாமதிப்பதற்கு வெளிப்ப டைத்தன்மை இல்லாமல் மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு நடவடிக்கையும் கடந்த இரு வருடங்களிலும் அடையப்பெற்ற பயன்களை மறுதலையாக்கிவிடக் கூடிய ஒரு நிலைவரத்துக்கு நாட்டைக் கொண்டு சென்றுவிடும் என்பதை அனுபவம் மிகுந்த ஒரு அரசியல் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி விளங்கிக்கொள்வார்.
கடந்த காலத்தில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதன் விளைவாக இலங்கை மீது திணிக்கப்பட்ட அனர்த்தங்களை ஜனாதிபதி அறியாதவருமல்ல.
தேர்தல்களைப் போன்ற மிகவும் அடிப்படையான விவகாரங்களில் நிலவும் நிச்சயமற்ற தன்மை இலங்கையின் உறுதிப்பாட்டின் மீதான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நம்பிக்கையை மலினப்படுத்திவிடும்.
ஆட்சிமுறையில் உண்மையும் முரண்பாடின்மையும் வெளிப்படைத் தன்மையும் இருக்கவேண்டியது சமூகத்தின் உறுதிப்பாட்டின் மீதான நம்பிக்கையைப் பேணுவதற்கு மிகவும் அவசியமானவையாகும். அவ்வாறு இருந்தால் தான் இன்று செய்யப்படுகின்ற முதலீடுகள் எதிர்காலத்தில் நேர்மறையான விளைவுகளைத் தரக்கூடியதாக இருக்கும். ஜனாதிபதி தன்னை முழுமையாக அர்ப்பணித்து முன்னெடுக்கின்ற பொருளாதார மீட்சிக்கும் அது அவசியமானதாகும்.
கடந்த காலத்தைய நெருக்கடிகள் மீண்டும் ஏற்படுவதை இலங்கை தவிர்க்கவேண்டுமானால், பாராளுமன்ற பெரும்பான்மையின் ஊடாக அல்லது சட்டத்தை ஒரு குறிப்பிட்ட முறையில் வியாக்கியானப்படுத்துவதன் ஊடாக தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அரசியலமைப்பில் ஒட்டுவேலைகளைச் செய்வது உடனடியாக தவிர்க்கப்பட வேண்டும்.