வவுனியாவில் நேற்று(05) அதிகாலை கடும் பனிமூட்டம், வாகனச் சாரதிகள் போக்குவரத்தில் பெரும் சிரமங்கள்

4 months ago



வவுனியாவில் நேற்று(05) அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால், வாகனச் சாரதிகள் போக்குவரத்தை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

நேற்று முன்தினம் மாலை கடும் மழை பொழிந்ததன் பின்னர் நேற்றுக் காலை அதிகமான பனிமூட்டம் காணப்பட்டதோடு அனைத்து பிரதேசங்களும் வெண்மையாக காட்சியளித்தன.

இதனால் போக்குவரத்தில் ஈடுபட்ட வாகனச் சாரதிகள் கடும் சிரமத்தை எதிர் கொண்டதோடு வாகன மின் குமிழ்களை ஒளிரவிட்டு பயணித்தனர்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் தென்மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, குருநாகல், காலி மற்றும் மாத்தறை    மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.