இலங்கை ஜனாதிபதி ஊழலுக்கு எதிரான நடவடிக்கை போன்று முல்லைத்தீவு மீனவர்களையும் காப்பாற்ற வேண்டும். அருள்நாதன் தெரிவிப்பு
ஜனாதிபதி இலஞ்சம், ஊழல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைப் போன்று எம் மீனவர்களையும், கடலையும் காப்பாற்ற வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவரும், வடமாகாண கூட்டுறவு சங்கத்தின் உப தலைவருமான வி. அருள்நாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
புதிதாக வந்திருக்கும் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மீனவ மக்கள் சார்பில் நல்ல முறையில் நாட்டை கொண்டு செல்வதற்காக வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடற்தொழிலில் அதிகமான வளத்தைக் கொண்டிக்கும் இறால் தொழில் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
இத் தொழிலுக்கு இடையூறாக இருந்தது இந்தியன் இழுவைப் படகு.
கடலடி நேரத்தில் நாங்கள் தொழிலுக்குச் செல்லாமல் இருக் கும்போது 50 மேற்பட்ட படகுகளை கொண்டுவந்து எமது வாழ்வாதாரத்தை சுரண்டும் நிலை இருந்தது. இதற்கு முன்னரும் இப்படி நடந்தது.
அதற்கு முன்னாள் கடற்றொழில் அமைச்சரிடம் வைத்த கோரிக்கைக்கு அமைவாக அத்துமீறி நுழைபவர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தற்பொழுது கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதி இருப்பதானால் நாம் சில கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
காரணம் இந்திய இழுவைப் படகுகள் மட்டுமல்ல, சட்டவிரோத மீன்பிடி தொழில்கள், அங்கீகரிக்கப்படாத தொழில்களை எமது கடற்பகுதிகளில் செய்கிறார்கள்.
இரவில் சுருக்குவலை, டைனமற் பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை ஆகவே ஜனாதிபதி இலஞ்சம், ஊழல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றார்.
அதே போன்று எம் மீனவர்களையும் கடலையும் காப்பாற்ற வேண்டும். அத்தோடு சட்ட விரோத தொழிலை நிறுத்தி சட்டத்திற்குட்பட்ட தொழிலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் - என்றார்.